என் பணியின் நினைவுகளை விட்டுச் செல்லும் காலம் வந்து விட்டது: கிரண்பேடி

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, விரைவில் மாற்றப்படுவார் எனவும், புதிய கவர்னர் நியமன பணிகள் துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில், 2016 மே 29ல், கிரண்பேடி, கவர்னராக பொறுப்பேற்றார். முதல்வர் நாராயணசாமிக்கு, ஜூன் மாதம் பதவி பிரமாணம் செய்து வைத்ததுடன், அவரது பொறுப்பு நின்றுவிடவில்லை.
மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதில், மிகவும் ஆர்வம் செலுத்தினார்.பொது மக்களிடம் நேரடியாக குறை கேட்பது, அதிகாரிகளை அழைத்து, ஆய்வுக் கூட்டம் நடத்துவது, வார இறுதி நாட்களில் நீர்நிலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது, உள்ளிட்ட பல பணிகளை கையில் எடுத்தார்.

இதனால், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டது அதே நேரம், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு, சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். கவர்னர் கிரண்பேடி, சமூக வலைதளங்களில் ஆட்சியாளர்களை விமர்சித்து வந்தார். இதற்கு, முதல்வர் நாராயணசாமி நேரடியாகவும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ., க்கள் மூலமும் பதிலடி கொடுத்து வந்தார்.
கவர்னர் கிரண்பேடி பதவி ஏற்று, இன்றுடன் மூன்று ஆண்டுகள் முடிகிறது. கடந்த ஆண்டுகளில், புதுச்சேரியில் அவர் ஆற்றிய பணிகள் குறித்து, மக்களுக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
என் மூன்றாண்டு காலத்தை, கவர்னராக நிறைவு செய்கிறேன். என் பணியின் நினைவுகளை விட்டுச் செல்லும் காலம் வந்து விட்டது. ஒவ்வொரு நாளும், கவர்னர் மாளிகையின் மேல், தேசிய கொடியை ஏற்றும்போது, எழுப்பப்படும் ஊதுகுழலின் ஒலியுடன் என் வேலை தொடங்கும்.
இது, என் பதவியின் நோக்கத்தை நினைவுபடுத்துகிறது. என் அன்றாட வேலைகளை, உடனுக்குடன் திட்டமிடுகிறேன். பிரதமர் மோடி என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுச்சேரியில், ஒரு சில ரவுடியிசம் தவிர, தலைக்கவசம் அணிவதைத் தவிர்ப்பது தவிர, மக்கள் அனைவரும் பொதுவான சட்டத்தை மதிப்பவர்களே. புதுச்சேரியின் அனைத்து தேவைகளையும், மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என, உறுதி அளிக்கிறேன்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த இதய டாக்டர் புருஷோத்தமன், புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்படுவார் என, தகவல் வெளியாகியுள்ளது.