என் கடைசி புகலிடம் எம்.ஜி.ஆர் சமாதிதான் – சசிகலாவிடம் ஜெயலலிதாவின் உருக்கம்

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட இருக்கிறார். ‘ அண்ணா,
எம்.ஜி.ஆரைப் போலவே ராஜாஜி மண்டபத்தில் உடல் வைக்கப்பட வேண்டும்; எம்.ஜி.ஆர் சமாதியில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை வேண்டுகோளாகவே சசிகலாவிடம் கூறியிருந்தார் ஜெயலலிதா’ என்கிறார் அ.தி.மு.க சீனியர் ஒருவர்.

சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோர் நினைவிடம் அமைந்திருக்கிறது. முதல்வர் ஜெயலலிதாவின் உடலும் எம்.ஜி.ஆர் சமாதியில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.

” உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கடற்கரையோரங்களில் தலைவர்களின் சமாதி அமைவதற்கு அனுமதியில்லை. கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியையும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லா சான்றிதழையும் பெற்றாக வேண்டும்.

அப்போலோவில் நேற்றிரவு நிலைமை கைமீறிப் போவதை அறிந்து, இறுதிக் காரியங்களுக்கான வேலைகளில் இறங்கினார் சசிகலா. ராஜாஜி மண்டபத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை சீரமைக்கும் வேலைகள் தொடங்கின. ‘ தன்னுடைய இறுதிக் காரியங்கள் இப்படித்தான் நடக்க வேண்டும்’ என முன்பே அறிவுறுத்தியிருந்தார் அம்மா” என விவரித்த அந்த அ.தி.மு.க நிர்வாகி மேலும் தொடர்ந்தார்…

” பலமுறை தன்னுடைய பேச்சில் ஒன்றைக் குறிப்பிடுவார் முதல்வர். ‘ என் குடும்பத்தில் யாருமே 60 வயதைக் கடந்து இருந்ததில்லை. என் அம்மா, அண்ணன் ஆகிய இருவருமே 60 வயதிற்குள் இறந்துவிட்டார்கள். 60 வயதுக்கு மேல் வாழ்வது நான் மட்டும்தான்’ என்பாராம்.

அண்ணா, எம்.ஜி.ஆரைப் போலவே, தன்னுடைய உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட வேண்டும் என்பதையும் விருப்பமாகக் கூறியிருந்தார். காரணம். எம்.ஜி.ஆர் இறந்தபோது, அவரைச் சுற்றியிருந்தவர்கள் அம்மாவைக் கடுமையாகத் திட்டி கீழே தள்ளிவிட்டார்கள்.

அவரது வாழ்நாளுக்குமான அவமானமாக அது அவர் மனதில் பதிவானது. அந்த சம்பவத்தையே வைராக்கியமாக எடுத்துக் கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தலைவராக உயர்ந்தார். ‘அதே இடத்தில் என்னுடைய உடலும் அடக்கம் செய்யப்பட வேண்டும்’ என்பதை சசிகலாவிடம் தெரிவித்திருந்தார்.

‘தன்னுடைய இறுதி நாட்கள் எப்படி இருக்க வேண்டும்’ என அவர் எப்படி விருப்பப்பட்டாரோ, அதன்படியே செய்யப்பட்டன” என்றார் நெகிழ்ச்சியோடு.

” 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா சமாதிகளைப் புதுப்பிக்க 8 கோடியே 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் 3 கோடியே 40 லட்சத்தில் எம்.ஜி.ஆர். சமாதியில் வளைவு அமைக்கப்பட்டது.

சமாதிக்கு முன்புறம் முகப்பு கோபுரம் எழுப்பி, ஒரு பெண் குதிரையை நிறுவச் செய்தார். கிரேக்க கதாபாத்திரங்களில் வரும் பெண் குதிரை என்றாலும், அதற்கு இரட்டை இலையைப் பொருத்தச் செய்தது முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணம்தான்.

இப்போது அந்த வளாகத்துக்குள்தான் அவர் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இவையெல்லாம், முன்கூட்டியே திட்டமிட்டு செய்யப்பட்டதோ என்ற கேள்வி எழாமல் இல்லை.

ஒருவேளை, ‘ தன் குடும்பத்தில் 60 வயதிற்கு மேல் யாரும் இருக்க மாட்டார்கள்’ என்பதை உணர்ந்தே, முதல்வர் இவ்வாறு செய்திருக்கலாம் என்பதையே காட்டுகிறது.

ஏனென்றால், மருத்துவர்களைவிடவும் ஜோதிடத்தையும் நேரத்தையும் காலத்தையும் நம்பியவர் முதல்வர்.’சிறுதாவூரில் அடக்கம் செய்தால், பிரமாண்ட மணிமண்டபத்தை எழுப்பலாம்’ என்பதுதான் சசிகலா உறவினர்களின் கருத்தாக இருந்தது. ஆனால், முதல்வரின் விருப்பத்தைச் சொல்லி, எம்.ஜி.ஆர் சமாதியில் அடக்கம் செய்யும் பணிகளைத் தொடங்கச் சொன்னார் சசிகலா.

ஏற்கெனவே அமைந்திருக்கும் சமாதியில் இன்னொரு உடல் அடக்கம் என்பதால் மத்திய அரசும் சிக்னல் கொடுத்துவிட்டது” என்கிறார் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்.

தன் வாழ்நாளை தீர்மானித்தது இறப்புக்குப் பிறகான தன் இருப்பையும் தீர்மானித்த ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!