”என்னை கைது செய்யத் தயாரா,” என, மேற்கு வங்க அரசுக்கு, அமித் ஷா சவால்

மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் பேரணி நடத்த, பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு, அனுமதி மறுக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, தடையை மீறி, கோல்கட்டா செல்லப் போவதாக, அமித் ஷா அறிவித்துள்ளார். ”என்னை கைது செய்யத் தயாரா,” என, மேற்கு வங்க அரசுக்கு, அமித் ஷா சவால் விடுத்துள்ளார்.

வட கிழக்கு மாநிலமான, அசாமில், என்.ஆர்.சி., எனப்படும், தேசிய குடிமக்கள் பட்டியல் இறுதி வரைவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், இடம் பெறாத, 40 லட்சம் பேரை, நாட்டை விட்டு வெளியேற்ற, சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டது. இதற்கு, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான, மம்தா பானர்ஜி, கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷாவையும் கடுமையாக விமர்சித்தார்.

பா.ஜ.,வுடன், ஏற்கனவே மோதல் போக்கை பின்பற்றி வரும் மம்தா, என்.ஆர்.சி., விவகாரத்திலும் ஆவேசமாக கருத்து தெரிவித்தது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலையொட்டி, மேற்கு வங்கத்தில், பா.ஜ.,வை பலப்படுத்தும்
நடவடிக்கைகளை, பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா எடுத்து வருகிறார்.

மேற்கு வங்கத்தில், அதிகமான தொகுதிகளில், பா.ஜ.,வை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதில், அவர் தீவிரம் காட்டி வருகிறார். இதையொட்டி, வரும், 11ல், கோல்கட்டாவில் பிரமாண்ட பேரணி நடத்த, அவர் திட்டமிட்டு உள்ளார்.

ஆனால், அந்த பேரணிக்கு, கோல்கட்டா நகர போலீசார் அனுமதி மறுத்ததாக தகவல் வெளியானது. தடையை மீறி பேரணி நடத்தினால், அமித் ஷாவை கைது செய்யவும், மேற்கு வங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. மேற்கு வங்க அரசின் இந்த நடவடிக்கை, பா.ஜ.,வினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, டில்லியில் நேற்று அமித் ஷா கூறியதாவது:

திட்டமிட்டபடி, கோல்கட்டாவில் பேரணியை நடத்தியே தீருவோம். பேரணி நடத்தச் சென்றால், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு, என்னை கைது செய்வதாகக் கூறியுள்ளது. இந்த விஷயத்தில், அவர்களுக்கு சவால் விடுக்கிறேன். முடிந்தால், என்னை கைது செய்யட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அமித் ஷாவின் சவால் குறித்து, மம்தா பானர்ஜியிடம், நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அப்போது, ”மேற்கு வங்கத்தில் எங்கு வேண்டுமானாலும், அமித் ஷா செல்லட்டும்; அவரை யாரும் தடுக்கப் போவதில்லை,” என்றார்.

கடந்த, 2014 நவம்பரில், கோல்கட்டாவில், பா.ஜ., பேரணி நடத்த, மாநகராட்சி அனுமதி மறுத்தது. இது தொடர்பாக, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில், பா.ஜ., வழக்கு தொடர்ந்து, அனுமதி பெற்றது குறிப்பிடத்தக்கது.