
எனக்கெதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றினால் சந்தை சரிவடையும் – டிரம்ப்
2016 தேர்தல் நேரத்தில் தம்முடன் உறவு வைத்திருந்ததாக பேசாமல் இருப்பதற்காக இரண்டு பெண்களுக்கு தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சார்பில் பணம் தரப்பட்டது தொடர்பான விவகாரம் பெரிதாகி வருகிறது.
இந்நிலையில் தம்மை பதவி நீக்கும் வகையில் (அமெரிக்க காங்கிரசில்) பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவந்தால், அதனால் சந்தை சரிவை சந்திக்கும், எல்லோரும் ஏழையாவார்கள் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஃபாக்ஸ் நியூசுக்கு தந்த பேட்டியில் அவர் இப்படித் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் தங்களுக்கு உறவு இருந்ததாக கூறிய இரண்டு பெண்கள் தேர்தல் நேரத்தில் பேசாமல் இருப்பதற்காக அவர்களுக்குப் பணம் தரப்பட்டது என டிரம்பின் முன்னாள் வழக்குரைஞர் கூறினார். அப்படி பணம் தந்தது சட்டபூர்வமானதே என்று கூறினார் டிரம்ப்.
2016 அமெரிக்க அதிபர் தேர்தல் நேரத்தில் அந்தப் பெண்களுக்குப் பணம் தருவதில் பங்கெடுத்ததன் மூலம் தாம் சட்ட விரோதமாக நடந்துகொண்டதாக டிரம்பின் முன்னாள் வழங்குரைஞர் மைக்கேல் கோவன் ஒப்புதல் தெரிவித்தார்.
இதற்குப் பதில் அளித்த டிரம்ப், அந்த இரண்டு பெண்களுக்கு பணம் தரப்பட்டது தேர்தல் பிரசார விதிகளை மீறவில்லை என்கிறார். அது தமது தனிப்பட்ட நிதியில் இருந்து தரப்பட்டதே அல்லாமல் பிரசார நிதியில் இருந்து வழங்கப்படவில்லை என்றும் கூறுகிறார் டிரம்ப்.
ஆனால், அந்த இருவரில் ஒருவருக்குப் பணம் தந்தது பற்றிய பேச்சின்போது பணம் தந்ததே தமக்குத் தெரியாது என்று கடந்த காலத்தில் பேசியுள்ளார் டிரம்ப்.
குறைவான தண்டனை பெறுவதற்காக கதைகள் புனைவதாகவும் அவர் மைக்கேல் கோவனை குற்றம்சாட்டினார்.
ஃபாக்ஸ் & ஃப்ரெண்ட்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்க்காணலில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப், அந்தப் பெண்களுக்குப் பணம் கொடுத்தது பற்றி பின்னரே தமக்குத் தெரியும் என்றும், அந்தப் பணம் பிரசார நிதியில் இருந்து அல்லாமல் தமது சொந்த நிதியில் இருந்தே தரப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஆனால், டிரம்பின் இந்த கூற்று, டிரம்ப்பின் உத்தரவுப்படியே அந்தப் பெண்களுக்குப் பணம் தரப்பட்டதாக கோவன் கூறிய கூற்றோடு முரண்படுகிறது.
யார் அந்தப் பெண்கள்?
ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ், முன்னாள் பிளேபாய் மாடல் கரேன் மெக்டௌகல் ஆகிய இருவருக்கும் இந்தப் பணம் போனதாக நம்பப்படுகிறது. பணத்தை இரண்டு பெண்களுக்கு தந்ததாக பத்தாண்டு காலத்துக்கும் மேலாக டிரம்பின் தனிப்பட்ட வழக்குரைஞராக இருந்த கோவன் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்தப் பணப்பட்டுவாடா விவகாரம் அப்போது தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்படவில்லை. அந்தப் பணம் டிரம்பின் தனிப்பட்ட கௌரவத்தை பாதுகாப்பதற்காகத் தரப்பட்டதா, குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் என்ற முறையில் அவரது பெயரைப் பாதுகாக்கத் தரப்பட்டதா என்பதே சட்டபூர்வமாக விடைதேட வேண்டிய கேள்வியாக உள்ளது.
வாக்குகளைக் கவரும் நோக்கத்துடன் செலவிடப்படும் எல்லா பணம் குறித்தும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கவேண்டும் என்பது அமெரிக்கத் தேர்தல் விதி.
தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் நோக்கத்தோடு, வேட்பாளர் என்ற முறையில் அவரது பெயரைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு பணம் தரப்பட்டது என்று மைக்கேல் கோவன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
என்ன செய்ய முடியும்?
டிரம்ப் தற்போது குடியரசுத் தலைவராக இருப்பதால், அவர் மீது இந்தக் குற்றச்சாட்டுக்காக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றால் அதனை சாதாரண நீதிமன்றத்தில் செய்ய இயலாது.
அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசில் கண்டனத் தீர்மானம் கொண்டுவருவதுதான் சாத்தியமான சட்ட நடவடிக்கையாகத் தெரிகிறது. இதைச் செய்வதற்கு புலன்விசாரணை செய்வோர், தேர்தல் காரணங்களுக்காக டிரம்ப் அந்தப் பணத்தை கோவனிடம் தந்தார் என்பதை நிரூபிக்கவேண்டும். இந்நிலையில்தான் தம்மை பதவி நீக்கும் வகையில் கண்டனத் தீர்மானம் கொண்டுவருவதற்கான சாத்தியப்பாடு குறித்து டிரம்ப் பேசியுள்ளார்.