எனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன- நடிகை கங்கனா ரனாவத்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார்.

ஏ.எல்.விஜய் இயக்கும் படமான ‘தலைவி’ படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன் நடிப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அவரது தேதிகள் உரிய நேரத்தில் கிடைக்காததால் தற்போது, ‘தாம்தூம்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

சமீபத்தில் இவர் ஜான்சி ராணியாக நடித்து இயக்கிய ‘மணிகர்ணிகா’ படம் பெரிய வெற்றி பெற்றது. திறமைக்கும், சர்ச்சைக்கும் குறைவே இல்லாத கங்கனா ரனாவத் நடித்தால் ‘தலைவி’ படம் இந்திய அளவில் பேசப்படும் ஒன்றாய் அமையும் என கூறப்படுகிறது.

ஏ.எல்.விஜய் இயக்கும் முதல் பயோபிக் ‘தலைவி’. படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசை அமைக்கிறார். மேலும், பாகுபலி படத்தின் கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் இப்படத்திற்கு இணை கதாசிரியராக இணைய, படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.

கோவையில் நடிகை கங்கனா ரனாவத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தலைவி திரைப்படத்திற்காக தமிழ் மொழி கற்று வருகிறேன். அரசியலுக்கு வரும் எண்ணமில்லை, சினிமாவில் மட்டும் அரசியல் படங்களில் நடிப்பேன்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. 16 வயதில் சினிமாவுக்கு வந்தது, ஆணாதிக்கத்தை சமாளித்தது என்று நிறைய உள்ளன. ஜெயலலிதா முதல்வராவதற்கு முன் உள்ள காட்சிகள் மட்டும் சினிமாவில் இடம் பெற்று இருக்கும் என கூறினார்.