எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு வலியுறுத்தல்

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக இருக்கும் அஇஅதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டிருக்கிறது. வி.கே.சசிகலா தலைமையில் ஓரணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஓரணியாகவும் அதிமுகவினர் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்த, எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.

அதிமுக சட்டப்பேரவை குழு தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி. அதற்குப் பிறகு அவர் ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
———————————-

எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றக் குழு தலைவராக தேர்வானது சட்டப்படி செல்லாது: நத்தம் விஸ்வநாதன்

அதிமுக சட்டமன்றக்குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வில் யாருக்கு செல்வாக்கு அதிகம்? என்பதில் காபந்து முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கும், பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டதால், அதிமுக எம்.எல்.ஏக்களின் புதிய சட்டமன்றக்குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆளுநருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியதாகவும், விரைவில் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளரான நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து நத்தம் விஸ்வநாதன் கூறுகையில், “  எடப்பாடி பழனிச்சாமி தேர்வானது சட்டப்படி செல்லாது. எம்எல்ஏக்களை சுதந்திரமாக விட்டால் ஒபிஎஸ்க்குதான் ஆதரவு அளிப்பார்கள்” என்று தெரிவித்தார். அதேபோல், ஓ பன்னீர் செல்வம் ஆதரவு அணியில் உள்ள அமைச்சர் பாண்டியராஜனும்,  சட்டமன்றக்குழு தலைவராக தேர்வு செய்ய யாருக்கும் உரிமையில்லை” என்று தெரிவித்துள்ளார்.