ஊளையிடும் ஸ்டாலின், கமல்: சுப்பிரமணிய சுவாமி

ஹிந்தி திணிப்பு என கமல், ஸ்டாலின் ஊளையிட்டு வருகின்றனர் என பாஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி விமர்சத்துள்ளார்.

 

 

ஹிந்தி தினமான செப்., 14ல் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது டுவிட்டர் பதிவில், இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஹிந்தி தான என்று, கருத்து பதிவிட்டிருந்தார்.

 

அமித்ஷாவின் இந்த கருத்து பலதரப்பில் விவாதமாக மாறியுள்ளது. தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மைய தலைவர் கமல் உள்ளிட்டோர் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இது தொடர்பாக கமல் வெளியிட்டுள்ள வீடியோவில், 1950ல் இந்தியா குடியரசான போது அரசு கொடுத்த சத்தியத்தை திடீரென்று எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராடோ மாற்றிவிட முயற்சிக்கக் கூடாது, என பேசிய வீடியோவை தனது டுவிட்டரில் வெளியிட்டார். இது பாஜ., அரசை மறைமுகமாக விமர்சித்ததாக எதிர்ப்பு குரல் ஒலித்தது.

Kamal Haasan

@ikamalhaasan

இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிருபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.

புதிய திட்டங்களோ
சட்டங்களோ இயற்றப்படும் பொழுது அது மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.

வெள்ளையனை வெளியேற்றியது வெற்று நாயகத்திற்காக அல்ல ஜனநாயகத்திற்காக.

இந்த விமர்சனங்களுக்கு பாஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறிய கருத்து: கமல் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஹிந்தி திணிப்பு என ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஹிந்தி கற்பிக்க கூடாது என்று அவர்கள் திணிப்பதை என்னவென்று சொல்வது? முதலில் ஹிந்தியை மூன்றாவது மொழியாக தேர்வு செய்து கொள்ளும் வகையில் கொடுக்கலாம். எதைத் தேர்வு செய்து கொள்வது என்பது மாணவர்களின் முடிவாக இருக்கட்டும். இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார்.