ஊர்ந்து போனவர் ஊர் ஊராக செல்கிறார்: முதல்வரை விமர்சித்த ஸ்டாலின்

ஊர்ந்து ஊர்ந்து போனவர் தற்போது ஊர் ஊராக சென்று கொண்டிருப்பதாக முதல்வர் பழனிசாமியை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் நிற்பதை பார்த்தால் தற்போதைய ஆட்சியின் கொடுமையை விட இது ஒன்றும் பெரிது இல்லை என்பது போல் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி இங்கே வந்திருக்கிறார். ஊர்ந்து ஊர்ந்து போனவர் தற்போது ஊர் ஊராக சென்று கொண்டிருக்கிறார். அதனை சொன்னால் அவருக்கு கோபம் வரும். பாம்பு கடியில் உள்ள விஷத்தை விட துரோகத்தின் விஷம் கொடுமையானது.
கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் சசிகலாவுடன் இருந்து அவருக்கு துரோகம் செய்து விட்டு பழனிசாமியோடு சேர்ந்து தற்போது வேட்பாளராகி இருக்கிறார். தேர்தலுக்குப் பிறகு தளவாய் சுந்தரம் பா.ஜ.,வில் சேருவார். இலங்கை தமிழக மீனவர்கள் பிரச்னை இதுவரையிலும் தீர்த்து வைக்கவில்லை. தமிழகத்தில் திமுக ஆட்சி நிலைநிறுத்திய பிறகு இவை அனைத்திற்கும் தீர்வு ஏற்படுத்தப்படும். பொன்.ராதாகிருஷ்ணன் பல வாக்குறுதிகளை அளித்தார், அதை எதையும் செய்யவில்லை அவர் பொன்.ராதாகிருஷ்ணன் இல்லை பொய் ராதாகிருஷ்ணன் என்று சொல்லவேண்டும்.
சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது அதிமுகதான். தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எதிர்ப்போம் எனக் கூறுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த அரசு ஆயிரம் ரூபாய் வழங்கியது, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மீதமுள்ள 4 ஆயிரம் ரூபாயை வழங்குவோம். நடக்கும் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, நமது மானத்தை, மரியாதையை காப்பாற்ற நடக்கும் தேர்தல், மதவெறி கொண்ட பா.ஜ.,வை விரட்டுவதற்கான தேர்தல். உரிமையை காக்க திமுக., உயிரை காக்க மாஸ்க். கூட்டமாக கூடும் இடத்தில் வரும் போது, அனைவரும் மாஸ்க் போடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.