உ.பி.யில் மீண்டும் மோதல் வெடிக்கிறது; காங்கிரசுக்கு எதிராக வேட்பாளர்கள் களமிறங்க முலாயம் உத்தரவு

லக்னோ,
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் சமாஜ்வாடி 298 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரசுக்கு 105 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக நேற்று உத்தரபிரதேசம் சென்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் சேர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் பாரதீய ஜனதாவின் பிரிவினைவாத அரசியலை ஒடுக்கவேண்டும் என்றனர்.
காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாடி கட்சி கூட்டணி வைப்பது, முலாயம் சிங் யாதவிற்கு பிடிக்கவில்லை. “காங்கிரசுக்கு எதிராக சமாஜ்வாடி கட்சியை உருவாக்க நீண்ட காலம் நான் போராடினேன், இப்போதும் அகிலேஷ் யாதவை கூட்டணி விவகாரத்தை குறித்து மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி வருகின்றேன்,” என்ற முலாயம் சிங் யாதவ் தேர்தலில் இக்கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வேண்டும் என அறிவித்தார். அவருடைய இப்பேச்சை கட்சி வட்டாரத்தில் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
  இந்நிலையில் அகிலேஷ் யாதவுடன் மீண்டும் மோதும் வகையில், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 105 தொகுதிகளில் தன்னுடைய ஆதரவாளர்களை வேட்புமனுவை தாக்கல் செய்ய முலாயம் சிங் யாதவ் உத்தரவிட்டு உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
“இந்த 105 தொகுதிகளில் உள்ள நமது தொண்டர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் மிகவும் கடினமாக பணியாற்றினார்கள், இப்போது அவர்கள் என்ன நடக்க போகிறது. இது சரியானது கிடையாது. கட்சிகாக அவர்கள் ஆற்றிய பணியின் நலன் அழிவதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்,” என்று கூறிஉள்ளார் முலாயம் சிங் யாதவ். ஏற்கனவே சமாஜ்வாடி கட்சி விவகாரம் தொடர்பாக அகிலேஷ் யாதவுடன் முலாயம் சிங் யாதவ் மோதினார், ஆனால் தோல்வியில் முடிந்தது. கட்சி இப்போது அகிலேஷ் வசம் சென்றது. இப்போது மீண்டும் மோதலில் ஈடுபடும் வகையில் முலாயம் சிங் யாதவ் தனிநடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார்.