உ.பி.யில் மகா கூட்டணி உடைந்தது !! இடைத்தேர்தலில் மாயாவதி தனியாக போட்டி

உத்தரபிரதேசத்தில் மொத்தம் 80 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இங்கு வெற்றிப்பெறும் கட்சி மத்தியில் எளிதாக ஆட்சி அமைக்கலாம் என்ற நிலை இருக்கிறது. இதனை 2014 தேர்தலில் செய்தது. அங்கு 73 தொகுதிகளை பா.ஜனதா கூட்டணி கைப்பற்றியது. பா.ஜனதா மட்டும் 71 தொகுதிகளில் வென்றது. இம்முறை பா.ஜனதாவை தோற்கடிக்க மாநிலத்தில் ஆட்சி செய்த இரு பெரிய மாநில கட்சிகளான பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கூட்டணி அமைத்தது. இதனால் பா.ஜனதாவிற்கு பின்னடைவாக இருக்கும் என பார்க்கப்பட்டது.

இருப்பினும் பா.ஜனதா கட்சி மோடி அலையில் வெற்றியை தனதாக்கியுள்ளது. பா.ஜனதா கட்சி முன்பு போல் 71 தொகுதிகளில் வெற்றிப்பெறவில்லை என்றாலும் 7 தொகுதிகளை மட்டும் இழந்து 64 தொகுதிகளை தன்வசப்படுத்தியது. கடந்த முறை 42 சதவீதம் வரையிலான வாக்குகளை பெற்றது பா.ஜனதா. இம்முறை சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணியையும் தாண்டி 49.6 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளது. மத்தியில் ஆட்சி என்ற வியூகத்துடன் தொடங்கப்பட்ட மகா கூட்டணி மோடியின் அலையில் சிக்கி சின்னாபின்னமானது.

கடந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஒருதொகுதியில் கூட வெற்றிப்பெறவில்லை. ஆனால் இம்முறை 10 தொகுதிகளை வென்றது. கடந்த முறை சமாஜ்வாடி 5 தொகுதிகளில் வென்றது. அதேபோன்று இம்முறையும் 5 தொகுதிகளில்தான் வென்றது. கூட்டணியால் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10 தொகுதிகள் கிடைத்தது. இரு கட்சிகளின் வாக்கு வங்கி குறைந்தது.

மாநிலத்தில் எம்.எல்.ஏ.வாக இருந்த 11 பேர் எம்.பி.யானதால் அந்த சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில் மகா கூட்டணி தொடரும் என முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாயாவதி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இடைத்தேர்தலில் மாயாவதி தனியாக போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமாஜ்வாடியில் இருந்து விலகிய சிவபால் யாதவ் மற்றும் காங்கிரஸ் கட்சி யாதவ மக்களின் வாக்கை பிரிக்கிறது. கூட்டணி பயனற்றது. யாதவ சமுதாயத்தினரின் வாக்குகள் வரவில்லை. அகிலேஷ் யாதவ் குடும்பத்தாரால் கூட யாதவ மக்களின் வாக்குகளை பெற்று வெற்றிப்பெற முடியவில்லை. எனவே இடைத்தேர்தலை தனியாகவே சந்திப்போம் என மாயாவதி கட்சி நிர்வாகிகளிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.