உ.பி.யில் பாஜகவின் வெற்றிக்கு உதவிய முஸ்லிம்கள்

உ.பி. தேர்தலில் பாஜகவுக்கு முஸ்லிம்களும் வாக்களித்ததாகக் கருதப்படுகிறது. அக்கட்சிக்கு 40 சதவீத வாக்குகள் கிடைத் துள்ளதால் இவ்வாறு கூறப் படுகிறது.

உ.பி.யில் முஸ்லிம்கள் சுமார் 21 சதவீதம் பேர் உள்ளனர். இதனால் இந்த முறை பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் முஸ்லிம் வாக்குகளையே அதிகம் குறி வைத்திருந்தன. பாஜக சார்பில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் கூட நிறுத்தப்படவில்லை. எனினும் இக்கட்சிக்கு சுமார் 40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதால், முஸ்லிம்களும் பாஜகவுக்கு வாக்களித்ததாகக் கருதப்படுகிறது. உ.பி.யில் மொத்தம் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் பாஜக வசம் 73 இடங்கள் உள்ளன இதற்கும் முஸ்லிம்கள் ஆதரவு காரணமாக இருந்தது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனிச்சட்ட வாரியத்தின் தலைவரான ஷாயிஸ்தா அம்பர் கூறும்போது, “முஸ்லிம் பெண்கள் பல ஆண்டுகளாக முறையிட்டு வந்த முத்தலாக் பிரச்சினையை மத்தியில் ஆளும் பாஜக அரசு கையில் எடுத்துள்ளது. இது முஸ்லிம் பெண்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் பாஜகவுக்கு முஸ்லிம்கள் வாக்களித்திருக்கலாம். ஏனெனில் இதுவரை முஸ்லிம்களுக்காக வாக்குறுதிகள் அளித்த எந்தக் கட்சியும் அவற்றை முழுமையாக நிறைவேற்றவில்லை. எனவே, இம்முறை முஸ்லிம்களில் பலர் வெறுப்படைந்து பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். உ.பி.யில் எங்கள் வாக்குகள் இல்லாமல் பாஜகவுக்கு இந்த அளவுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை” என்றார்.

உ.பி.யில் முஸ்லிம்களில் ஒருசாரார் வெற்றி பெறும் கட்சிக்கு யோசித்து வாக்களிப்பதில் பெயர் பெற்றவர்கள் எனக் கருதப்படுகிறது. மற்றவர்கள் தங்கள் தொகுதிகளில் போட்டியிடும் ஒன்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் வேட்பாளர்களில் தங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களாகப் பார்த்து வாக்களிப்பது உண்டு. இதனால், பிரியும் வாக்குகள் பல நேரங்களில் பாஜகவுக்கு சாதகமாக அமைவதுண்டு. எனவே இந்த முறை முஸ்லிம் வாக்குகள் பிரிந்ததுடன் அவர்களில் ஒரு பகுதியினர் அளித்த வாக்குகளும் பாஜகவின் வெற்றிக்கு காரணம் எனக் கருதப்படுகிறது. முஸ்லிம் ஆண்களிலும் முத்தலாக் முறையை எதிர்ப்பவர்கள் உ.பி.யில் உள்ளனர்.

உ.பி.யின் 403 சட்டப்பேரவை தொகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர் இதில் இடம்பெற்ற ராம்பூர் மாவட்டத்தின் இரு தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் ஒருவர் கூட போட்டியிடவில்லை. அதில் ஒன்றான பிலாஸ்பூரில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்து, பாஜகவின் பல்தேவ் சிங் வெற்றி பெற்றுள்ளார். இதன் அருகிலுள்ள ரிசர்வ் தொகுதியான மிலக்கிலும் சமாஜ்வாதிக்கு பதிலாக பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த மாவட்டம் சமாஜ்வாதியின் மூத்த தலைவர் ஆசம்கானின் செல்வாக்கு நிறைந்த மாவட்டம் ஆகும். இதன் அருகில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் தியோபந்த் உள்ளது. இங்கு முஸ்லிம்களின் பழம்பெருமை வாய்ந்த தாரூல் உலூம் மதரஸா அமைந்துள்ளது. இந்த தொகுதியிலும் பாஜகவின் பிரிஜேஷ் வெற்றி பெற்றுள்ளார். இங்கு காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் இரு சுயேச்சைகள் தோல்வி அடைந்தனர்.

உ.பி.யில் ஆளும் கட்சியாக இருந்த சமாஜ்வாதி, முஸ்லிம் வாக்குகளுக்காக காங்கிரஸுடன் கைகோர்த்தது. இதே காரணத்துக்காகவே காங்கிரஸும் அதற்கு சம்மதித்தது. உ.பி.யில் மூன்றாவது போட்டியாளரான மாயாவதி, தனது பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 106 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தினார். இது மற்ற கட்சிகளை விட அதிகமாகும்.