உ.பி.யில் நான் செய்த பணிகளை பட்டியலிட்டுவிட்டேன்; 3 ஆண்டு ஆட்சியில் நீங்கள் செய்தது என்ன? – பிரதமர் மோடிக்கு முதல்வர் அகிலேஷ் சவால்

‘‘உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு நான் செய்த பணிகளை பட்டியலிடுகிறேன். உங்களது 3 ஆண்டு கால ஆட்சியில் நீங்கள் செய்த பணிகளை சொல்ல முடியுமா?’’ என்று பிரதமர் மோடிக்கு அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் சவால் விடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. கடைசி மற்றும் 7-வது கட்ட தேர்தல் வரும் 8-ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பதோதி நகரில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சி சார்பில் முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:
உத்தரப் பிரதேச மாநிலத்தில் எனது அரசு செய்த 10 பணிகளை பட்டியலிடுகிறேன். அதுபோல் 10 பணிகளை அவரால் (பிரதமர் மோடி) பட்டியலிட முடியுமா? கடந்த 5 ஆண்டு காலத்தில் சமாஜ்வாதி அரசின் செயல் அறிக்கையை வெளியிட நான் தயார். ஆனால், மத்தியில் கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் செய்த பணிகள் குறித்த அறிக்கை தர அவர் தயாரா?
பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்
வாக்களிக்க பணம் தருவதாக நான் கேள்விபட்டேன். அந்தப் பணத்தை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், சமாஜ்வாதியின் சைக்கிள் சின்னத்துக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கிவிட்டதாக கூறுகின்றனர். கஞ்சத்தனமாக இருந்தால் நட்பு நீடிக்காது.
உயிரோடு இருக்கும் போதே தனக்காக நினைவிடங்களை அமைத்தவர் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி. அவர் தேர்தலுக்குப் பிறகு யாருடனும் ரக் ஷாபந்தன் (சகோதரத்துவம்) கொண் டாடுவார். எனவே, மாயாவதி விஷயத்தில் வாக்காளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் உ.பி.யில் நிறைய பணிகளை செய்துள்ளோம். இன்னொரு வாய்ப்பு வழங்கினால், நலத்திட்டங்களை மேலும் அதிகரிக்க செய்வோம்.
(தேர்தலுக்குப் பிறகு பாஜக.வுடன் மாயாவதி கூட்டணி வைத்துக் கொள்வார் என்று அகிலேஷ் யாதவ் அடிக்கடி கூறி வருகிறார். ஆனால், இந்தக் கருத்தை மாயாவதியும் பாஜக தலைவர்களும் மறுத்து வருகின்றனர்.)
இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி 298 இடங்களிலும் காங்கிரஸ் 105 இடங்களிலும் போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.