உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.,வுக்கு 33 % இட ஒதுக்கீடு

‘தமிழக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.வுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தர வேண்டும்’ என சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் பழனிசாமியிடம் கண்டிப்புடன் கூறியுள்ளார். கவர்னர் மாளிகையில் அமித்ஷாவை முதல்வர் சந்தித்தது போது இந்த நெருக்கடி தரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய ‘கற்றல், கற்பித்தல், தலைமையேற்றல்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பா.ஜ., தேசிய தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நேற்று முன்தினம் சென்னை வந்து கவர்னர் மாளிகையில் தங்கினார்.

அப்போது அமித்ஷாவை தமிழக முதல்வர் பழனிசாமி திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இருவரும் விவாதித்துள்ளனர். ‘நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.வுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்’ என முதல்வர் பழனிசாமியிடம் அமித்ஷா திட்ட வட்டமாக கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் சென்னை வண்டலுாரில் சிங்கம், புலி குட்டிகளுக்கு பெயர் சூட்டிய முதல்வர் ‘தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடக்கும்’ என கூறியிருந்தார். இந்த நிலையில் இருவரின் சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இருவரது சந்திப்பு குறித்து அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. – பா.ஜ. கூட்டணி படுதோல்வி அடைந்தது. ஆனாலும் இந்த இரு கட்சிகள் இடையேயான கூட்டணி தொடர்கிறது. மத்திய அரசு லோக்சபாவில் அறிமுகம் செய்த முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற அ.தி.மு.க. ஆதரவு அளித்தது.

சமீபத்தில் நடந்த வேலுார் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி சண்முகத்திற்கு ஆதரவாக வேலுார் மாவட்ட பா.ஜ. நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றி ஹிந்துக்களின் ஓட்டுக்களை ஒருங்கிணைத்தனர். எனவே அ.தி.மு.க. – பா.ஜ. இடையேயான புரிந்துணர்வு நன்றாகவே உள்ளது. வேலுார் தேர்தலில் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., தோல்வி அடைந்தாலும் தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடி தரும் நிலை ஏற்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி – துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. சென்னைக்கு அமித்ஷா வந்த அன்று தான் ‘விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்’ என முதல்வர் அறிவித்தார். லோக்சபா தேர்தலில் பா.ஜ.வுக்கு ஐந்து தொகுதிகள், அதாவது மொத்த இடங்களில் 12 சதவீதம் மட்டுமே ஒதுக்கி அ.தி.மு.க. ஏமாற்றி விட்டதாக பா.ஜ.வினர் கூறுகின்றனர்.

அதனால் ‘உள்ளாட்சி தேர்தலில் ஏமாறக்கூடாது; கிராம அளவில் பா.ஜ. காலுான்ற வேண்டும் என்றால் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும்’ என்பதில் அமித்ஷா உறுதியாக உள்ளார். எனவே ‘உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.வுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்’ என தன்னை சந்தித்த முதல்வரிடம், அமித்ஷா கடும் நிபந்தனை விதித்து பேசியுள்ளதாக தெரிகிறது.

கூட்டணி தொடரும் பட்சத்தில் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.,வுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டிய நெருக்கடி அ.தி.மு.க. தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் தயவு தேவைப் படுவதால் அ.தி.மு.க.வும் அமித்ஷாவின் நிபந்தனைக்கு ஆட்படும் என தெரிகிறது. இவ்வாறு அ.தி.மு.க. வட்டாரங்கள் கூறின.