உலக பணக்காரர்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த அதானி!

புது டில்லி: 2021-ல் உலகளவில் அதிக செல்வம் ஈட்டிய நபர்களில் அமேசானின் ஜெப் பெசோஸ், டெஸ்லாவின் எலான் மஸ்க் ஆகியோரை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் முதல் தலைமுறை தொழிலதிபரான அதானி முதலிடம் பிடித்துள்ளார்.
ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியலின் படி முதல் தலைமுறை தொழிலதிபரான அதானியின் நிகர சொத்து மதிப்பு 2021-ம் ஆண்டில் 1.17 லட்சம் கோடி உயர்ந்து, 3.6 லட்சம் கோடியாகியுள்ளது. இதன் மூலம் அவர் உலகளவில் இந்தாண்டின் மிகப்பெரிய அளவில் செல்வம் ஈட்டிய நபராகியுள்ளார். அந்த வகையில் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்துக்கு போட்டியிட்ட அமேசானின் ஜெப், டெஸ்லாவின் எலான் மஸ்க் ஆகியோரை வீழ்த்தியுள்ளார்.
இந்த ஆண்டு அதானி குழும பங்குகளில் ஒன்றை தவிர அனைத்தும் 50 சதவீத வளர்ச்சி கண்டன. அதானியின் நண்பரும், ஆசியாவின் பணக்காரருமான முகேஷ் அம்பானி இந்த சமயத்தில் சுமார் 58,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளார்.

அதானி குழுமம் கடந்த சில மாதங்களில் உலகளவிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது. மேலும் இந்தியாவில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், டேட்டா சென்டர்கள் மற்றும் நிலக்கரி சுரங்கங்களை தங்கள் வசப்படுத்தி வருகின்றனர்.

இது மட்டுமின்றி ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்க தொழிலில் ஈடுபடும் திட்டத்தை விரைவுப்படுத்தி வருகின்றனர். அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் இந்தாண்டு 96% உயர்ந்துள்ளது. அதானி என்டர்பிரைசஸ் 90%, அதானி மின் நிறுவனம், துறைமுகங்கள் போன்றவை 52% வருவாய் ஈட்டி உள்ளன.