உலக நாடுகள் இலங்கை அரசுடன் இணைந்து, அரங்கேற்றிய முள்ளிவாய்க்கால் கோரத்தின் 8வது ஆண்டு நினைவு நாளில் உலகெங்கும் கண்ணீர் வழிந்ததோடியது

முள்ளிவாய்க்கால் என்னும் ஒரு மூலைக்கிராமம் இப்போது உலகெங்கும் உச்சரிக்கப்படுகின்றன ஒரு இரத்தம் தோய்ந்த சொல்லாகிவிட்டது. அங்கு 2009ம் ஆண்டு மே மாதத்தில் இரத்த ஆறு ஒரு புறமாய் ஓட, மனித சதைகள் சிதறியக் கிடக்க, பச்சிளம் பாலகர்களின் மழலை மொழியிலான ஓலங்கள் உரத்துக் கேட்க, போர் வெறி கொண்ட அகிலத்து நாடுகளின் இராணுவக்கொடியவர்கள் குண்டுகளை கொத்துக் கொத்தாக ஏவி விட அந்த அனர்த்தம் நடந்தேறியது.

இலங்கை அரசும் அதன் அப்போதைய அதிபர் கொடுயோன் மகிந்தாவும் வேண்டி நிற்க வந்து குவிந்தன உலகப் படைகள். தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டாலும், ஆசியாவின் ஒரு சிறிய தீவிற்குள் ஒரு புரட்சிகரப் போராட்டத்தின் விளைவாக ஒரு இனம் சார்ந்த அரசு உருவாகிவிடக் கூடாது என்ற பிடிவாதத்தில் அங்கு பேயாட்டம் ஆடினார்கள் சீருடை அணிந்த சிப்பாய் பிசாசுகள்.

காந்தி மகான் பிறந்த இந்தியாவின் ஆட்சியாளர்கள் மிகவும் தீவிரமாக இந்த இந்த கொடிய தாக்குதல்களின் பின்னார் நின்றார்கள் என்பதற்கு சாட்சிகள் நிறையவே தோன்றியவண்ணம் உள்ளன. இந்தியாவின் ஆகாய விமானங்கள் அடிக்கடி எங்கள் வானத்துப் பாதைகளில் வட்டமிட்டுப் பறந்து போராளிகளோ அன்றி அப்பாவிப் பொதுமக்களோ கடல் மார்க்கமாக தப்பிவிடக் கூடாது என்று கங்கணம் கட்டி நின்றன.

இவ்வாறு இருக்கையில் நேற்று வியாழக்கிழமை நேற்று முள்ளிவாய்க்கால் கொடூரத்தின் 8வது ஆண்டு நினைவு நாள் உலகெங்கும் அனுஷ்டிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் வரைக்கும் மக்கள் அங்கு ஒன்று கூடினார்கள். கனடாவிலும் ஏனைய புலம்பெயர்ந்த நாடுகளிலும் மக்கள் ஒன்றுநேர்ந்து கொடூரமான முறையிலும் கபடத்தனமான வகையிலும் கொல்லப்பட்ட போராளிகளுக்காகவும் பொதுமக்களுக்காகவும் கண்ணீரைக் காணிக்கையாக்கினார்கள்.

கனடாவிலும் இந்தப் பங்களிப்பு மிகவும் நேர்த்தியாக கடைப்பிடிக்கப்பட்டது. தலைநகர் ஒட்டாவாவில் கனடிய தமிழர் தேசிய அவையினர் ஏற்பாடு செய்ய அஞ்சல் நிகழ்வில் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினார்கள். நேற்று மாலை ஸ்காபுறோவில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் மக்கள் பெருந்தொகையாகக் கலந்து கொண்டார்கள். தமிழ்நாட்டில் எமது மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் பழ. நெடுமாறன் அவர்கள் புதல்வியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான உமா அவர்கள் கலந்து கொண்டு உணர்வு பூர்வமான உரையாற்றினார்கள். கனடிய பிரதமரும் தனது எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையிலும் இலங்கை அரசிற்கு விடயங்களை சொல்லுகின்ற வகையிலும் இநத முள்ளிவாய்க்கால் நினைவு தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இவ்வாறாக முள்ளிவாய்க்கால் கொடூரத்தை தாங்க முடியாமல் உலகெங்கும் முனகல் ஒலிகள் கேட்டுக்கொண்டே இருந்தன. இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுப்பவர்களோடு நாமும் சேர்ந்து நின்று ஆதரவு தருவோம் என்ற உறுதி மொழியோடு இவ்வார கதிரோட்டத்தைச் சமர்ப்பிக்கின்றோம்.