உலக நாடுகளுக்கு குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி: இந்திய பிரதமர் மோடி

உலக நாடுகள் அனைத்துக்கும் குறைந்த விலையில், எளிதாக கிடைக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி மற்றும் அதனை செயல்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர், தலைமை அறிவியல் ஆலோசகர், மூத்த விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கொரோனா தடுப்பூசி தயாரித்து வரும் இந்திய நிறுவனங்களுக்கு வாழ்த்துக்கள். அந்நிறுவனங்களின் முயற்சிக்கு மத்திய அரசு துணை நிற்கும். கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். பரிசோதனைகள் குறைந்த விலையில், முறையாக, துரிதமாக வழங்க வேண்டும். பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் குறித்து, அறிவியல் ரீதியான சோதனைகளை நடத்த வேண்டும்.

கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்படும் ஆயுஷ் அமைச்சகத்துக்கு பாராட்டுக்கள். இந்தியாவுக்கு மட்டுமன்றி, உலக நாடுகள் அனைத்துக்கும் குறைந்த விலையில், மருத்துவ பரிசோதனைகள், தடுப்பூசிகள், மருந்துகள் வழங்கப்படும். கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர, அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.