உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இங்கிலாந்து- நியூசி., மோதல்; அரையிறுதியில் வீழ்ந்தது ஆஸி.,

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலுக்கு இங்கிலாந்து அணி ஜோராக முன்னேறியது. அரையிறுதியில் ஐந்து முறை கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்து முதல் அணியாக பைனலுக்கு முன்னேறிவிட்டது. பர்மிங்காமில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆர்ச்சர் வீசிய இரண்டாவது ஓவரில் கேப்டன் பின்ச் டக் அவுட்டானார். வோக்ஸ் ‘வேகத்தில்’ ஆபத்தான வார்னர் (9) சிக்க, ஆஸ்திரேலிய அணி ஆட்டங்கண்டது. கவாஜாவுக்குப்பதில் வந்த ஹேண்ட்ஸ்கோம்ப் (4) ஏமாற்ற, 14 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி பொறுப்புடன் விளையாடினர்.இவர்கள், அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

ரஷித் ‘சுழலில்’கேரி (46), ஸ்டாய்னிஸ் (0) அவுட்டாகினர்.ஸ்மித் அரை சதம் கடந்தார். மேக்ஸ்வெல் (22) ஒரு சிக்சர் விளாசிய திருப்தியில் கிளம்பினார். வோக்ஸ் ‘வேகத்தில்’ ஸ்மித் (85), ஸ்டார்க் (29) சிக்கினார். ஆஸ்திரேலிய அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக வோக்ஸ், ரஷித் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஜோடி ‘சூப்பர்’ துவக்கம் தந்தது. இருவரும் மாறி மாறி பவுண்டரிகள் விளாசினர். முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்தபோது, பேர்ஸ்டோவ் (34) ஆட்டமிழந்தார். அபாரமாக விளையாடிய ஜேசன் அரை சதம் விளாசினார். ஆனால், 85 ரன்களில் அம்பயரின் தவறான தீர்ப்பால் அவுட்டானார். கேப்டன் மார்கன், ஜோ ரூட் இணைந்து வெற்றியை எளிதாக்கினர்.

மார்கன் பவுண்டரி அடிக்க, இங்கிலாந்து அணி 32.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரூட் (49), மார்கன் (45) அவுட்டாகாமல் இருந்தனர். ஜூலை 14ல் லார்ட்சில் நடக்கும் பைனலில் இங்கிலாந்து, நியூசிலாந்து மோதுகின்றன. இதில் வெல்லும் அணி புதிய உலக சாம்பியனாக உருவெடுக்கும்.