உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது

ரோகித் சதம், சகால் 4 விக்கெட் வீழ்த்தி கைகொடுக்க இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது.

இங்கிலாந்து மண்ணில் ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. சவுத்தாம்ப்டனில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டுபிளசி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் காயத்திலிருந்து மீண்ட கேதர் ஜாதவ் இடம் பிடித்தார். ‘வேகத்தில்’ பும்ரா, புவனேஷ்வர், ‘சுழலில்’ சகால், குல்தீப் இடம்பிடித்துள்ளனர். தமிழகத்தின் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கருக்கு இடம் கிடைக்கவில்லை. தென் ஆப்ரிக்க அணியில் ஆம்லா மீண்டும் அணிக்கு திரும்பினார்.

தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா, குயின்டன் டி காக் துவக்கம் தந்தனர். பும்ரா ‘வேகத்தில்’ ஆம்லா (6) சிக்கினார். மீண்டும் வந்த பும்ரா இம்முறை குயின்டனை (10) அவுட்டாக்கினார். இதன் பின், சகால் ‘சுழல்’ ஜாலம் காட்டினார்.

இவரது ஒரே ஓவரில் துசென் (22), கேப்டன் டுபிளசி (38) சிக்கினர். டுமினி 3 ரன்களில் திரும்பினார். அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால், தென் ஆப்ரிக்க அணி ரன் சேர்க்க முடியாமல் திணறியது. மீண்டும் வந்த சகால் இம்முறை மில்லர் (31), பெலுக்வாயோவை (34) அவுட்டாக்கி அசத்தினார்.

கடைசி கட்டத்தில் கிறிஸ் மோரிஸ், ரபாடா இணைந்து தொல்லை தந்தனர். பாண்ட்யா பந்தை ரபாடா பவுண்டரிக்கு விரட்டினார். சகால் பந்தை மோரிஸ் சிக்சருக்கு பறக்கவிட்டார். புவனேஷ்வர் பந்தில் மோரிஸ் (42) சிக்கினார். தாகிர் ‘டக்’ அவுட்டானார். தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 227 ரன்கள் மட்டும் எடுத்தது. ரபாடா (31) அவுட்டாகாமல் இருந்தார். இந்திய வெற்றிக்கு 228 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக சகால் 4 விக்கெட் கைப்பற்றினார்.

எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு தவான் (8) ஏமாற்றினார். கேப்டன் கோஹ்லி 18 ரன்கள் எடுத்தார். ரோகித், லோகேஷ் ராகுல் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். பெலுக்வாயோ பந்துவீச்சில் இருவரும் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். ராகுல் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அபாரமாக விளையாடிய ரோகித், ஒரு நாள் அரங்கில் 23வது சதம் விளாசினார். மோரிஸ் பந்தில் தோனி (34) சிக்கினார்.

பாண்ட்யா வந்த வேகத்தில் மூன்று பவுண்டரி அடிக்க இந்திய அணி 47.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா (122), பாண்ட்யா (15) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகனாக சதம் விளாசிய ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.