உலகில் முதன்முறையாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல்: சீனாவில் கண்டுபிடிப்பு

சீனாவில் இருந்து பரவிய கோவிட்-19 வைரஸ் பாதிப்பில் இருந்தே உலகம் மீளாத நிலையில், இப்போது உலகின் முதன்முதலாக சீனாவில் ஒருவருக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் உலகில் பீதிய கிளப்பியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கோவிட் வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பல லட்சம் உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த கோவிட் பரவல் பல நாடுகளில் 2வது, 3வது அலையாக தாக்கி வருகிறது. அதற்குள் மற்றுமொரு ஆபத்து மனிதனை தாக்கியுள்ளது. அதுவும் சீனாவிலேயே முதல் பாதிப்பு பதிவாகியுள்ளது. சீனாவின், ஜென்ஜியாங் நகரை சேர்ந்த 41 வயதான நபருக்கு H10N3 பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதாக, அந்நட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் நோயாளியின் உடல் நிலை சீராக உள்ளதாக அரசு நடத்தும் சிஜிடிஎன் டிவி சேனல் தெரிவித்துள்ளது.

ஹெச்10என்3 வைரஸ், கோழிகளில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் இதுவரை மனிதர்களில் தொற்று பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. அப்படியிருக்கையில், உலகிலேயே மனித உடலில் இந்த வைரசின் முதல் பாதிப்பு பதிவாகியுள்ளது மருத்துவத் துறையினரை கலக்கமடைய செய்துள்ளது. இது பொதுவான வைரஸ் கிருமி அல்ல எனத் தெரிவித்துள்ள மருத்துவத்துறை ஆராய்ச்சியாளர்கள் இந்த வைரஸின் மரபணுவை பகுப்பாய்வு செய்து இது பழைய வைரஸ்களிடமிருந்து பரிணமித்ததா அல்லது புதிய வைரசா என்பதை கண்டறிய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சீன சுகாதார அதிகாரிகள் பறவைக் காய்ச்சல் பரவல் குறித்து அஞ்ச வேண்டியதில்லை என்றும், இந்த தொற்று கோழிகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் என்றும், இது பெருந்தொற்றாக மாறும் அபாயம் மிகக் குறைவு என்றும் கூறினர்.