உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளை எனும் பெயரில் இலங்கை கொழும்பில் ஒரு கிளை அமைக்கப்பட்டதாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாவிலுள்ள தலைமையகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்
தலைமையகம் விடுக்கும் அவசர
எச்சரிக்கை:

கடந்த வார இறுதியில்; உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளை எனும் பெயரில் இலங்கை கொழும்பில் ஒரு கிளை அமைக்கப்பட்டதாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாவிலுள்ள தலைமையகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்த இருவரினால் அவசர அவசரமாக இவ்வாறு ஒரு கிளை அமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயற்பாட்டிற்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது என்பதை தலைமையகம் உறுதியாக அறியத்தருகிறது. இலங்கையில் ஒரேயொரு கிளை மட்டுமே இருப்பதுடன் அதன் செயற்பாடுகள் வழமை போன்று செயற்பட்டு வருவதாகவும் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கை யாழ்ப்பாணத்தில் பன்னாட்டு அறிஞர்களையும், பேராசிரியர்களையும் உள்ளடக்கியதாக ஒரு சர்வதேச மாநாடு நடைபெற ஏற்பாடாகி வருகிறது. அதற்கான முன்னேற்பாடுகளைக் கவனிக்க இயக்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், ஜேர்மன் நாட்டு அமைப்பின் தலைவருமான திரு. இ. இராஜசூரியர் அவர்கள் தலைமைப்பீடத்தினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது இலங்கையில் தங்கியிருந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்.

இந்த அகில உலக சிறப்பு மாநாட்டினைக் குழப்பும் முகமாக இந்த குறிப்பிட்ட இருவரும் கங்கணம் கட்டிச் செயற்பட்டு வருகின்றனர். உண்மையில் அவர்களுக்கும் எமது இயக்கத்திற்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது எனவும் அவர்களில் ஒருவர் எமது இயக்கத்தின் சாதாரண அங்கத்து வத்தைக்கூட இதுவரை பெற்றிருக்கவில்லை எனவும் எக்காரணம் கொண்டும் அவர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் இலங்கையிலுள்ள பொது மக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை தலைமையகம் கேட்டுள்ளது.
எமது இயக்கத்தின் இலச்சினையை பிரதி செய்து திருட்டுத் தனமாக ஒரு அச்சகத்தில் அச்சிட்டுப் பாவிப்பது தொடர்பாக ஏற்கனவே அதற்கான ஆதாரங்களுடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத் தடையும் எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ள நிலையில் இவர்களது செயற்பாடு வெறுமனே பதவிகளைக் குறி வைப்பதாகவே அமைந்துள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டு கலாசார விழுமியச் செயற்பாடுகளுக்கு ஒவ்வாத நடைமுறை வாழ்க்கை முறையைப் பின்பற்றிவரும் இவர்கள் அவற்றை வளர்க்க முன்னிற்கும் இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவது வெளிச்சமாகியுள்ளது.
எனவே இவர்களது செயல்களுக்கு இலங்கையிலுள்ள எவரும் துணைபோக வேண்டாம் எனவும் தலைமையகம் கேட்டுக் கொள்கின்றது.

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்
தலைமையகம் கனடா