உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் ஜூலை 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இதனையடுத்து அங்கு பொதுமுடக்கம், கட்டுப்பாடுகள் என வைரஸ் தொற்றை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தும் கண்டறியப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று அதிதீவிரமாக பரவியது. இதனால் இங்கிலாந்து திக்குமுக்காடியது. மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இங்கிலாந்து உடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக பல நாடுகளும் அறிவித்தன. அதற்குள் சில நாடுகளில் உருமாறிய கொரோனா பரவியது.

இந்நிலையில் ஜூலை 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். உருமாறிய கொரோனா தொற்றால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ள ஜான்சன், தடுப்பூசி திட்டம் சரியான வகையில் வேலை செய்யும்வரை ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை எனவும் கூறினார்.

மேலும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள வெளிநாட்டில் இருந்து வரும் நபர்கள் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்தில் இதுவரை 97,939 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.