உரிமையாளர் குடும்பத்தினை காப்பாற்ற நாகபாம்புடன் சண்டையிட்ட வளர்ப்பு நாய் உயிரிழப்பு

குர்டா நகரில் ஜாத்னி என்ற பகுதியை சேர்ந்தவர் அமன் ஷெரீப்.  இவர் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார்.  தனது வீட்டில் டைசன் என பெயரிட்ட ஒன்றரை வயது கொண்ட டால்மேசியன் வகை நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் நாயானது இரவில் தொடர்ந்து குரைத்துள்ளது.  இதனால் ஷெரீப் ஓடி சென்று என்னவென்று கவனித்துள்ளார்.  அவர்கள் வீட்டு வாசலில் நாகபாம்பு ஒன்று இறந்து கிடந்துள்ளது.  அதன் அருகில் நின்றிருந்த டைசன் ஒரு சில நிமிடங்களில் சரிந்து விழுந்துள்ளது.  அதனை பரிசோதித்த ஷெரீப் வாலிலும் முகத்திலும் நாகபாம்பு கடித்த காயத்தினை கண்டுள்ளார்.
அவர் உடனடியாக கால்நடை மருத்துவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.  ஆனால் அங்கு யாரும் இல்லை.  தனியார் மருத்துவர்களும் இவரது அழைப்பினை எடுக்கவில்லை.  இதனால் டைசனை அவரால் காப்பாற்ற முடியவில்லை.
இதுபற்றி கூறிய ஷெரீப், எங்களை காப்பதற்கு போராடிய டைசன் உயிரிழந்து விட்டது.  சரியான மருத்துவ வசதி கிடைக்காத நிலையில் டைசனை எங்களால் உயிர்பிழைக்க வைக்க முடியவில்லை என கூறியுள்ளார்.