:உபி மாநிலம், அயோத்தியில் தாக்குதல் – பாக்.,கில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு திட்டம்

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் தாக்குதல் நடத்த, பாக்.,கில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதற்கான உத்தரவை அதன் தலைவர், மசூத் அசார் பிறப்பித்துள்ளது தெரிய வந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள, ‘அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில், ஹிந்துக் கடவுள் ராமருக்கு கோவில் கட்டலாம்’ என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.

ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு, அண்டை நாடான, பாக்., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதால், எவ்வித தாக்குதலிலும், பாக்., ராணுவமோ, அதன் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகளோ மேற்கொள்ள முடியவில்லை. சமீபத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ‘இது முஸ்லிம்களுக்கு எதிரானது’ என, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றன.

இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.இந்த நிலையில் ஹிந்து, முஸ்லிம் இடையே பிரச்னையை ஏற்படுத்தும் வகையில், அண்டை நாடான, பாக்., சதி திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அயோத்தியில், ராமர் ஜென்ம பூமி இடத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.பாக்., அரசின் ஆதரவு பெற்ற, ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு, இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அயோத்தியில் தாக்குதல் நடத்தும்படி, தன் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு, சமூக வலைதளத்தில், ஜெய்ஷ் – இ – முகமது தலைவர் மசூத் அசார் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தகவல், நமது உளவு அமைப்புகளுக்கு கிடைத்துள்ளது.அதையடுத்து, அயோத்தி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய துாதரகங்களை தாக்க, பாக்., உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து உளவு அமைப்புகள் கூறியுள்ள தாவது:ஆப்கானிஸ்தானின் காபூலில் இந்திய துாதரகம் மீது தாக்குதல் நடத்த, பாக்., உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஆப்கானிஸ்தானில் உள்ள சில பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டுகள் நிரப்பிய கார் மூலம் தாக்குதல் நடத்தப்படலாம் என, தெரிகிறது. லஷ்கர் – இ – தொய்பா உட்பட பல பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய, லாகூரைச் சேர்ந்த சயிபுல்லா என்ற பயங்கரவாதியிடம் இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.காபூலைத் தவிர, ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் மற்றும் ஹெராத்தில் உள்ள இந்திய துாதரகங்களை தாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, உளவு அமைப்புகள் கூறியுள்ளன.