உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாக வசிக்கும், வங்கதேசத்தவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களை வெளியேற்ற அரசு முடிவு

உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாக வசிக்கும், வங்கதேசத்தவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களை அடையாளம் காண மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களை வெளியேற்ற அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக உயர் அதிகாரிகள் கூறுகையில், போக்குவரத்து மையங்கள், மாவட்ட புறநகர்களில் உள்ள சேரி பகுதிகளில் வசிக்கும் சந்தேக நபர்களை, போலீசார் கண்டுபிடித்து, அவர்களின் ஆவணங்களை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உ.பி.,யில் சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேசத்தவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் சட்டவிரோதமாக ஆவணங்கள் பெற உதவிய அரசு அலுவலர்களையும் கண்டுபிடிக்க வேண்டும். சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேசத்தவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களின் கைரேகை மற்றும் அடையாளங்களை பதிவு செய்ய வேண்டும். கட்டுமான நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் அடையாளங்களை வைத்திருப்பது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பு. சட்டவிரோதமாக வசிப்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள். இதனை உயர் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சில நாட்களுக்கு முன்னர், அசாம் மாநிலத்தில் குடிமக்கள் வரைவு பதிவேடு வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சம் பேரது பெயர்கள் நீக்கப்பட்டன. குடிமக்கள் பதிவேடு வெளியிட்டதற்கு வரவேற்பு தெரிவித்த உ.பி., முதல்வர் யோகி. ஆதித்யநாத், அசாமில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தேச நலனுக்கானது. உத்தர பிரதேசத்திலும், இதேபோன்று பதிவேடு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.