உத்தரவிட்ட மோடி; நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமி

குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் கார்களில் இருந்து சிவப்பு சுழல் விளக்கு அகற்றப்பட வேண்டும் என்ற மோடி அமைச்சரவையின் முடிவையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது காரில் இருந்து சுழலும் சிவப்பு விளக்கை அகற்றியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி இதுதொடர்பாகப் பேசும்போது, மத்திய அரசின் அறிவுறுத்தலை அடுத்து, நான் பயணம் செய்யும் காரில் இருந்து சுழலும் சிவப்பு விளக்கை அகற்றியுள்ளேன்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டங்களில் அவர் சிவப்பு வண்ண சுழல் விளக்குகளைப் பயன்படுத்தியது கிடையாது என்பதை இத்தருணத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்களின் கார்களில் சுழலும் சிவப்பு விளக்கை அகற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று (புதன்கிழமை) முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி, ஆபத்து காலங்களில் அவசர தேவைக்காகச் செல்லும் வாகனங்களைத் தவிர பிரதமர், மத்திய அமைச்சர்கள் ஆகியோரின் கார்களில் இருந்து சுழலும் சிவப்பு விளக்குகள் அகற்றப்பட வேண்டும்.

அவசர கால ஊர்திகளான ஆம்புலன்ஸ், தீ தடுப்பு வாகனம் மற்றும் நீல வண்ண சுழல் விளக்கு பொருத்தப்பட்ட காவல் துறை வாகனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது மே 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.