உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு கடிதம் இன்று கையளிக்கப்படவுள்ளது

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளும், ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் தம்மை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் உறுப்பினர்கள் இந்தக் கடிதத்தை, ஜனாதிபதி செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை கையளிக்கவுள்ளனர்.

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் உறுப்பினர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளான, சுலக்சன், திருவருள், தபரூபன்,சிவசீலன், ஜெயச்சந்திரன், ஜெகன், நிர்மலன், தில்லைராஜ் உள்ளிட்ட 10 அரசியல் கைதிகளையும் பார்வையிட்டனர்.
இதன்போதே, 10 அரசியல் கைதிகளும் கையெழுத்திட்ட, ஜனாதிபதிக்கான கடிதம், சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவரான சேனக பெரேராவிடம் கையளிக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவரான சேனக பெரேரா,

”தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 107 அரசியல் கைதிகளில், பெரும்பாலானவர்களுக்கு எதிராக வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. சிலருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, சிலர், வழக்கு தாக்கல் செய்யப்படாமல் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக, தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். பெரும்பாலான வழக்குகளில் அரசியல் கைதிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலமே, ஒரே சான்றாக முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் தம்மை ஏமாற்றி வருவதாகவும், அதனால் அரசியல் வாக்குறுதிகளில் நம்பிக்கையிழந்து போயிருப்பதாகவும் அவர்கள் எம்மிடம் தெரிவித்தனர். அரசியல் கைதிகளில் பெரும்பாலானவர்களுக்கு இன்னமும் சிறைத்தண்டனை வழங்கப்படாதபோதும், நீண்டகாலம் சிறையில் இருப்பதால் பெரும் தண்டனையை அனுபவித்திருக்கிறார்கள்.

அவர்கள் அரசியல் கைதிகளாக இருக்கிறார்கள். அவர்கள் பெற்றோரை இழந்திருக்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் குழந்தைகளைக் கூட இழந்திருக்கிறார்கள். அடிப்படையில், அவர்கள் அனைத்தையும் இழந்து போயுள்ளனர் என்று கூறினார்.