உடலை அடையாளம் காணும் நோக்கில் டி.என்.ஏ., ஆய்விற்காக உள்ளாடையை திருடிய தகவல்

மத்தியக் கிழக்கு நாடான சிரியாவில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி, உயிரிழந்தார். அவரின் உடலை அடையாளம் காணும் நோக்கில் டி.என்.ஏ., ஆய்விற்காக அவரது உள்ளாடையை திருடிய தகவல் வெளியாகியுள்ளது.

மத்தியக் கிழக்கு நாடான ஈராக்கை சேர்ந்த பாக்தாதி, 2014ல் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை துவக்கினார். பல்வேறு கொடூரமான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட இந்த அமைப்பினர், ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். தலைமறைவாக இருந்த பாக்தாதியை கண்டறிந்த அமெரிக்க படைகள், பதுங்கி இருந்த இடத்தில் அதிரடி தாக்குதல் நடத்தினர். அனைத்து தரப்பிலும் சுற்றி வளைக்கப்பட்டதால் தப்பிக்க முடியாது என்ற நிலையில் வெடிகுண்டுகளை உடலில் கட்டிக் கொண்டு, தற்கொலை செய்தார். இந்த தாக்குதலுக்கு சிரியாவின் குர்திஷ் தலைமையிலான ஜனநாயகப் படையும் துணையாக இருந்தது.

இந்நிலையில், சிரியா படைகளின் மூத்த ஆலோசகரான போலாட் கேன், இந்த தாக்குதலுக்காக மேற்கொள்ள உளவு பணிகள் குறித்த விவரங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அவர் பதிவிட்டிருப்பதாவது:
மே 15 முதல் பாக்தாதியை கண்காணிக்க அமெரிக்க படையுடன் (சிஐஏ) இணைந்து பணியாற்றி வருகிறோம். பாக்தாதி, அடிக்கடி தன் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்தார். அவருடன் இருந்த எங்கள் உளவாளி, அவரின் உள்ளாடையை திருடி வந்துள்ளார். இதன்மூலம், டிஎன்ஏ ஆய்வு செய்து, அவர் தானா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.