உடனடியாக தவற்றை திருத்திக் கொள்ளுங்கள் அல்லது விளைவை சந்தியுங்கள்: ட்ரம்புக்கு சீனா எச்சரிக்கை

சீனப் பொருட்களுக்கு 14 லட்சம் கோடி ரூபாய் வரி விதித்த அமெரிக்கா, உடனடியாக தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் சீனா, இந்தியா போன்ற நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சீனாவும், அமெரிக்காவும், இறக்குமதிப் பொருட்களுக்கு பரஸ்பரம் வரி விதித்தன. இதனால் உலகளாவிய வர்த்தகப் போர் நடைபெறும் சூழல் உருவானது.

சீனப் பொருட்களுக்கு மேலும் இந்திய மதிப்பில் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் (200 பில்லியன் டாலர்) மதிப்பிலான கூடுதல் வரியை அமெரிக்கா சமீபத்தில் விதித்தது. இதனால் இருநாடுகள் இடையே ஏற்கெனவே கடுமையான மோதல் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கியதற்காக சீனா மீது அமெரிக்கா சில பொருளாதார தடை விதித்துள்ளது.

சீனா சமீபத்தில் ரஷ்யாவிடமிருந்து Su-35 f என்ற போர் விமானங்களையும், S-400 ஏவுகணைகளையும் வாங்கியது. சீனாவின் நடவடிக்கை அமெரிக்காவுடனான உறவில் விதிமீறும் செயல் என்று சீனாவுக்கு சில பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

இதற்கு சீனா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஜெங் ஷாங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சீனா மீது பொருளாதார தடைகள் விதிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம். அமெரிக்காவின் செயலால் இருநாடுகள் இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்படும். சர்வதேச சூழலில் தேவையற்ற பதற்றம் ஏற்படும். உலகளாவிய விதிமுறைகளை மீறி அமெரிக்க தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த பொருளாதார தடையை அமெரிக்கா உடனடியாக திரும்பப் பெறவேண்டும். தங்கள் தவற்றை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் விளைவுகளை சந்திக்க நேரிடும்’’ எனக் கூறினார்.