உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 3,316 மதுபான கடைகள் மூடல்: நெடுஞ்சாலையோர கிளப்களிலும் மதுபான விற்பனை நிறுத்தம்

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளை ஒட்டி அமைந்துள்ள 3,316 மதுபான கடைகள் மூடப்பட்டன.

தமிழகம் முழுவதும் 5,672 மதுபான கடைகளை தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக் நடத்தி வருகிறது. இதில் 3,316 மதுபான கடைகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி அமைந்துள்ளன.

இந்நிலையில் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள மதுபானக் கடைகளை மூடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் மார்ச் 31-ம் தேதி இரவுக்குள் நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள மது பானக் கடைகள் அனைத்தையும் கட்டாய மாக மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் கூறியது.

இதனையடுத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடும் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாகத் தொடங்கியது. இது தொடர்பாக மாநில மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நேற்று முன்தினம் அவசர உத்தரவு பிறப்பித்தார். நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தும் மார்ச் 31-ம் தேதி இரவோடு மூடப்பட வேண்டும் என்றும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் மூடப்பட்ட கடைகளின் எண்ணிக்கை முதலானவை தொடர்பான அறிக்கையை உடனே அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் தனது உத்தரவில் கூறியிருந்தார்.

இந்த உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், பார்களை மூடும் நடவடிக்கைகளை அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் மேற்கொண்டனர். இதன்படி தமிழ்நாடு முழுவதும் நேற்று 3 ஆயிரத்து 316 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கிளப்களில் மூடப்பட்ட பார்கள்

சென்னையில் மொத்தம் 315 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. அவற்றில் 68 கடைகள் நேற்று மூடப்பட்டன. மேலும், நெடுஞ்சாலைகளை ஒட்டி அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்களில் உள்ள பார்களும் மூடப்பட்டதால், அங்கு மதுபான விற்பனை நிறுத்தப்பட்டது. சென்னையில் கிண்டி லீ ராயல் மெரிடீயன், அண்ணா சாலையில் உள்ள பழமைவாய்ந்த காஸ்மோபாலிடன் கிளப், ஜிம்கானா கிளப், ரெயின் ட்ரீஹோட்டல், ஹயாத் ஹோட்டல், வடபழனி விஜயா பார்க் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று பார்கள் மூடப்பட்டிருந்தன.

திருவள்ளூர் மாவட்டத்தில் 325 மதுபான கடைகள் செயல்பட்டு வந்தன. இதில் 176 டாஸ்மாக் மதுபான கடைகளை நேற்று டாஸ்மாக் நிர்வாகம் மூடியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 256 கடைகளில் 208 கடைகள் நெடுஞ்சாலைகள் ஓரத்தில் இருப்பதால், அவற்றை மூட வேண்டும். எனினும் பல இடங்களில் நெடுஞ்சாலை ஓரம் இருந்த கடைகள் வழக்கம்போல் திறந்திருந்தன. உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக எத்தனை கடைகள் மூடப்பட்டுள்ளன என மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் கேட்டபோது, இது தொடர்பான பட்டியல் எங்கள் தலைமை அலுவலகத்தில்தான் உள்ளது என்றார்.

மதுரை மாவட்டத்தில் 267 கடைகள் செயல்பட்டன. அவற்றில் 141 மதுக்கடைகள் அடைக்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 160 கடைகளில் 103 கடைகளும், தேனி மாவட்டத்தில் செயல்பட்ட 98 கடைகளில் 77 கடைகளும் நேற்று அடைக்கப்பட்டன. அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 88 மதுக்கடைகள் மூடப்பட்டன. விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வந்த 168 டாஸ்மாக் கடைகளில் 90 கடைகளும், சிவகங்கை மாவட்டத்தில் 86 கடைகளும் மூடப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டத்தில் நெடுஞ்சாலையோரம் செயல்பட்டுவந்த 128 மதுக்கடைகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 84 கடைகளும் மூடப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 56 டாஸ்மாக் கடைகளும், 6 ஹோட்டல்கள், 3 கிளப்களில் செயல்பட்ட பார்களும் அடைக்கப்பட்டன.

திருச்சி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 122 கடைகள் மூடப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டத்தில் 124 கடைகளும், திருவாரூர் மாவட்டத்தில் 79 கடைகளும், நாகை மாவட்டத்தில் 49 கடைகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 90 கடைகளும், கரூர் மாவட்டத்தில் 63 கடைகளும், பெரம்பலூர் மாவட்டத்தில் 36 கடைகளும், அரியலூர் மாவட்டத்தில் 14 கடைகளும் மூடப்பட்டன.

கோவை மாவட்டத்தில் உள்ள 284 கடைகளில் 154 கடைகள் மூடப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் 164 கடைகள், நீலகிரி மாவட்டத்தில் 7 கடைகள், சேலம் மாவட்டத்தில் 135 கடைகள், நாமக்கல் மாவட்டத்தில் 154 டாஸ்மாக் மதுபானக் கடைகள் நேற்று மூடப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 237 டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 137 கடைகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 68 கடைகளும், தருமபுரியில் 49 டாஸ்மாக் கடைகளும் உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக அடைக்கப்பட்டன.

வேலூர் மாவட்டத்தில் 178 கடைகள் மூடப்பட்டதால் 530-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். மாற்று ஏற்பாடாக 45 இடங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வேலை இழந்த பணியாளர்கள் மண்டல டாஸ்மாக் அலுவலகத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில்144 கடைகளும், விழுப்புரம் மாவட்டத்தில் 145 டாஸ்மாக் கடைகளும், கடலூர் மாவட்டத்தில் 124 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. புதுச்சேரி மாநிலத்தில், புதுச்சேரி நகரில் 88, காரைக்காலில் 40, மாஹேயில் 34, ஏனாமில் 6 என மொத்தம் 168 கடைகள் மூடப்பட்டன.

கிளப் நிர்வாகிகள் எதிர்ப்பு

உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து கிளப் நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, “டாஸ்மாக் பார்களுடன் எங்களை ஒப்பிடுவது சரியல்ல. திடீரென மூடச்சொல்வதால், எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மது குடிக்க அனுமதி இல்லை என்றால், கிளப்பின் மற்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு, காலப்போக்கில் கிளப்பையே மூடும் நிலை ஏற்படும்” என்று கூறினர்.

நஷ்ட ஈடு வழங்க கோரிக்கை

உச்ச நீதிமன்ற உத்தரவால் ஏராளமான பார்கள், கிளப்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு பார் மற்றும் கிளப் உரிமையாளர்கள் சங்க நிறுவனர் பென்ஸ் சரவணன் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “டாஸ்மாக் கடைகளை மூடுவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் ஹோட்டல்கள், மனமகிழ் மன்றங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்களை டாஸ்மாக் கடைகளோடு ஒப்பிட்டு, இதற்கும் தடை விதிப்பது ஏற்புடையது அல்ல. எங்களது பார் உரிமத்தை புதுப்பிக்க ரூ.3 லட்சம் முதல் 16 லட்சம் வரை அரசுக்கு கட்டணம் செலுத்தி இருக்கிறோம். இவ்வாறு உரிமத்தை புதுப்பிக்க மார்ச் 31-ம் தேதி கூட பலர் கட்டணம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில், திடீரென பார்களை மூடினால் நாங்கள் என்ன செய்வது? பிற மாநிலங்களில் செப்டம்பர் வரை அனுமதி கொடுத்துள்ளதுபோல, தமிழ்நாட்டிலும் கால நீட்டிப்பு வழங்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் கிளப் மற்றும் ஹோட்டல் பார்களில் 5 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். சென்னையில் மட்டும் ஒன்றரை லட்சம் பேர் உள்ளனர். இவர்களால் வாகன விபத்துகள் ஏற்படுவது இல்லை. ஆகவே, எங்கள் தரப்பு நியாயத்தை உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு உரிய நிவாரணம் கோருவோம்” என்றார்.

ராமேசுவரத்தில் மக்கள் மகிழ்ச்சி

அப்துல் கலாம் பிறந்த ராமேசுவரத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ராமேசு வரம் தீவில் இயங்கி வந்த 11 மதுக்கடைகளில் 9 மதுக்கடைகள் மூடப்பட்டன. மீதமுள்ள 2 மதுக்கடைகள் தங்கச்சிமடம் மற்றும் பாம்பனில் உள்ளன. தற்போது ராமேசுவரத்தில் ஒரு மதுக்கடைகூட இல்லாததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.