ஈஸ்டர் தாக்குதல்: பதவி விலகிய இலங்கை முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவி ஏற்பு

இலங்கையில் ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை காரணமாக கூட்டாக பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் மீண்டும் திங்கள்கிழமை பதவியேற்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரபூர்வ இல்லத்தில் இவர்கள் பதவி பிரமாணம் செய்துக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த நான்கு முஸ்லிம் பிரதிநிதிகளே இன்று பதவி ஏற்றவர்கள்.

இதன்படி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சராக பதவி பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியூதீன் கைத்தொழில், வணிக அலுவல்கள், நீண்ட கால இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி திறன் அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக அமீர் அலி பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

துறைமுகம் மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சராக அப்துல்லா மஹரூப் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

கைத்தொழில், வணிக நடவடிக்கை, நீண்ட நாள் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல்;, கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி திறன் அபிவிருத்தி பதில் அமைச்சராக செயல்பட்ட புத்திக்க பத்திரண, இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துக்கொண்டார்.

அலிஷாயிர் மௌலானா, எச்.எம்.எம்.ஹரிஷ் மற்றும் பைசர் காசீம் ஆகியோர் இன்று பதவியேற்கவில்லை.

இரண்டு அமைச்சர்கள் இதற்கு முன்னதாக பதவியேற்பு
கூட்டாக பதவி விலகிய ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துப்படுத்தும் இரண்டு முஸ்லிம் அமைச்சர்கள் இதற்கு முன்னதாக மீண்டும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

தபால் மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சராக அப்துல் ஹலீமும், வீதி அபிவிருத்தி மற்றும் பெட்ரோலிய வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக கபீர் ஹசீமும் ஜுன் மாதம் 19ஆம் தேதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவி ஏற்றனர்.

முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியது ஏன்?

இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அந்த பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர்களுடன் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், ஆளுநர்களாக செயல்பட்ட அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோருக்கு தொடர்பு இருந்ததாகப் பலர் குற்றம்சாட்டினர்.

அமைச்சர் ரிஷாட் பதியூதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்குமாறு வலியுறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரர் கண்டியில் கடந்த ஜுன் மாதம் 31ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்தார்.

இந்தப் போராட்டத்தை தொடர்ந்து, கண்டியில் ஜுலை மாதம் 3ஆம் தேதி பொதுபல சேனா உள்ளிட்ட அமைப்புக்கள் ஒன்று திரண்டு பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டன.

இந்த நிலையில், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் ஜுன் மாதம் 3ஆம் தேதி பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து ஒன்றுகூடிய முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் தாம் கூட்டாக பதவி விலகுவதாக அறிவித்திருந்தனர்.

இந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் சரியான முறையில் நடத்தப்பட வேண்டுமாயின், தாம் பதவி விலக வேண்டும் என முஸ்லிம் அமைச்சர் அன்றைய தினம் நடத்திய ஊடக சந்திப்பில் கூறியிருந்தனர்.

இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று மாலை நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, தமது அமைச்சு பொறுப்புக்களை மீளப் பெற்றுக் கொள்வதற்கு இவர்கள் இணக்கம் தெரிவித்திருந்தனர்.