ஈஷா மைய சிவராத்திரி விழா; உற்சாக கொண்டாட்டம்

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழா கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். ஆடல், பாடல் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மக்கள் திரளாக பங்கேற்று விடிய, விடிய கொண்டாடினர்.

ஈஷா யோகா மையத்தில், மஹா சிவராத்திரி விழா, இன்று (4 ம் தேதி ) மாலை, 6:00 மணிக்கு துவங்கியது; காலை, 6:00 மணி வரை நடக்கிறது. விழாவில் ஜனாதிபரதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதல் நிகழ்வாக லிங்க பைரவி கோவிலில், தீபாராதனை நடந்த பின், காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த, 40 ராணுவ வீரர்களின் நினைவாக, ஜனாதிபதி மற்றும் சத்குரு இருவரும் இணைந்து ஈஷா வளாகத்தில் மரக்கன்று நட்டனர்.

தொடர்ந்து ஆதியோகி சிலை முன் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த இசைக்கலைஞர்களின் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி நடக்கின்றன.

விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி பேசுகையில், ‘சிவபெருமானுக்கு பல வடிவங்கள் உள்ளன. அவற்றில் அர்த்தநாரீஸ்வரர் முக்கியமானது. இவ்வடிவம், ஆண் தன்மை பெண் தன்மை இரண்டுமே சரிசமம் என்பதை உணர்த்துகிறது. இத்தத்துவம் பெண்ணுரிமை பற்றி பேசுகிறது. சில மாதங்களுக்கு முன் நாட்டிலுள்ள சிவன் கோயில்களை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, இது பெரும் மகிழ்வாக இருந்தது.’ இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, சத்குருவின் அருளுரை, தியானம், மந்திர உச்சாடனைகள் என, காலை, 6:00 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்நிகழ்ச்சிகள் அனைத்தும், ‘தினமலர்.காம்’ இணையதளத்தில் நேரடியாக ஒளிரப்பு செய்யப்படுகிறது.