ஈழத் தமிழருக்கு இந்திய மத்திய அரசின் ஆதரவு முக்கியமா இல்லையா ?

ஈழத் தமிழருக்கு இந்திய மத்திய அரசின் ஆதரவு இருந்தால் நன்மையா அல்லது தமிழ் நாட்டில் எந்தவொரு அதிகரமுமில்லாத, ஈழத் தேசியம் பேசும் ஒரு கட்சியின் ஆதரவு இருந்தால் போதுமா ?

இந்தியா என்பது, 28 மாநிலங்களும் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களும் சேர்ந்த, 543 லோக்சபா பாராளுமன்ற உறுப்பினர்களையும் மற்றும் 250 ராஜசபா(upper house) பாராளுமன்ற உறுப்பினர்களையும் மற்றும் 140 கோடி மக்கள் தொகையையும் கொண்ட ஜனநாயக நாடு !

இதில், 39 லோக்சபா உறுப்பினர்களையும் மற்றும் 18 ராஜசபா உறுப்பினர்களையும் மற்றும் 8 கோடி மக்கள் தொகையில் 6.5 கோடி தமிழர்களை கொண்டது தான் தமிழ்நாடு !

இந்தியாவின் தேசிய இறையாண்மையை பாதிக்கும் விடையமாக, எந்தவொரு மாநில அரசும் செயற்பட்டால், அந்த மாநிலத்தை 356 அரசியல் சட்டத்தை பாவித்து, ஆட்சியை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சிக்கு அந்த மாநிலத்தை கொண்டு வர, மத்திய அரசின் பரிந்துரையால் மட்டுமே முடியும் !

இந்திய மாநிலங்களுக்கான அதிகாரங்கள் மிகக் குறைவு மற்றும் இலங்கை விடையமாக இறுதி முடிவுகளை எடுக்கக் கூடிய அதிகாரம் இந்திய மத்திய வெளிவிவகார கொள்கைக்குத் தான் உள்ளது. மாநிலத்திற்கு அல்ல !

தற்பொழுது, சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கைக் கட்டுப்படுத்த இந்தோ-பசிபிக் பகுதியில் இந்தியாவுக்கு அதிக பங்கு அளிக்க அமெரிக்கா முயன்று வருகிறது என ஐ.நா.வின் முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, அமெரிக்க இந்திய மூலோபாய மற்றும் கூட்டாளர் மன்றம் (U.S.I.S.P.F) ஏற்பாடு செய்த மூன்றாவது இந்தியா-அமெரிக்க தலைமை உச்சி மாநாட்டில் பேசியுள்ளார் !

இந்தியாவின் இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ரஸ்சியாவின் இராணுவ அமச்சருக்குமிடையில் கை சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில், ரஸ்சியா எதிர்காலத்தில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை விற்கப் போவதில்லையென்று !

இப்படி பெரும்பான்மையான வல்லரசுகளும் மற்றும் பல நாடுகளும் இந்தியாவை தங்களின் விசேட நட்பு நாடாக வைத்திருக்க ஆசைப்படும் போது, ஈழத் தமிழர்களாகிய நாம் எதற்காக இந்திய BJP அரசை எதிர்க்க வேண்டும் !

எம் முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்கு இலங்கைக்கு ஆதரவாக இருந்த “இந்திய காங்கிரஸ் அரசு”, அடுத்த 50 வருடத்தில் ஆட்சியை பிடிக்க வாய்பில்லையென்று, அந்தக் கட்சியின் மேல் நிலைத் தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் தற்பொழுது தெரிவித்த கருத்தையும் ஆராய வேண்டும். அதன் அர்த்தம் குறைந்தது அடுத்த 25 வருடத்தை இந்திய BJP அரசின் ஆட்சி தான் இருக்குமென்று !

இப்படியிருக்கும் சூழ்நிலையில், தமிழ் நாட்டில் ஒரு MLA உறுப்பினர் கூட இல்லாத கட்சிக்கு பின்னால், எம் ஈழத் தமிழர்களில் சிலர் ஆதரவைக் கொடுத்து, மற்றும் மாநில அதிகாரம் உள்ள தமிழ்நாட்டு கட்சிகளையும் எதிர்த்தும், மற்றும் தனிக்காட்டு ராஜாவாக இந்திய மத்தியில் ஆட்சி செய்யும் BJP அரசையும் எதிர்த்து, எம்மவர்கள் எதை சாதிக்க முடியும் !

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரை நிறுத்த முடியாததற்கான முக்கிய காரணம், இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளில் எம்மவர்கள் அலைச்சியப் போக்கில் செய்த, அரசியல் நகர்வுகளின் பாரிய பின்னடைவு தான் !

எம் தேசியத் தலைவர் கூட ஒருபொழுதும், இந்தியாவின் உள் வீட்டு விடையங்களில் தன் மூக்கை நுழைத்ததில்லை !

அப்படியிருக்கும் பட்சத்தில், புலத்தில் இருக்கும் ஈழத் தமிழ் அமைப்புக்கள், ஒருபொழுதும் ஒருதலைப் பட்சமாக தமிழ்நாட்டில் உள்ள ஒரு கட்சிக்கு பின்னால் நிற்பது, ஈழத் தமிழர்களிற்கான தீர்வுக்கு தடையாக அமையும் !

கடந்த 50 வருடங்களிற்கு மேல் தமிழ் நாட்டில் உள்ள பல அரசியல் கட்சிகள், ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தார்கள். ஆனால், முள்ளிவாய்க்காலிற்குப் பிறகு உதித்த கட்சி, தேசியத் தலைவரின் புகைப்படத்தை விளம்பரப்படுத்தி, தங்களின் சொந்த அரசியல் கட்சியை நடத்துவதால், மற்றைய அரசியல் கட்சியினர் ஈழத் தமிழர்களை எதிர்ப்பவர்கள் என்றும் எடுத்துக் கொள்ள முடியாது !

புலத்தில் வாழும் எம்மவர்களில் சிலர், இணையதளமூடாக பல விளம்பர அரசியல் செய்திகளை திரும்பத் திரும்ப படித்து விட்டு, தமிழ் நாட்டில் ஈழத் தேசிய அரசியல் செய்வதாக சொல்லிக் கொண்டிருப்பவருக்கு பின்னால் நிற்பது, ஒரு கானநீர் மாதிரியான பகல் கனவு மட்டுமே !

ஈழத் தமிழர்களின் முழுமையான வலி வேதனை மற்றைய ஈழத் தமிழருக்கு மட்டுமே உணர்வுபூர்வமாக உணர முடியும். மற்றையவர்களிற்கு அது ஒரு வரலாற்றுக் கதை மாதிரியாகத் தான் இருக்கும் !

ஆனாலும், 140 கோடி இந்திய மக்களின் ஆதரவோடும் மற்றும் இந்திய மத்திய அரசின் ஆதரவோடும், நாம் அடுத்த கட்ட இராஜதந்திர ஈழ அரசியலை செய்து, எம் ஈழத் தமிழர்களின் தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டும் !

எதிர்காலத்தை நோக்கி, சிந்திப்போம் மற்றும் ஒற்றுமையாக செயற்படுவோம் !