ஈபிஎஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையைத் தொடங்கிவிட்டேன்: தினகரன்

அதிமுக பொதுக் குழு தீர்மானம் செல்லாது. பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையைத் தொடங்கிவிட்டேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு, சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதில், இரட்டை இலையை மீட்பது மற்றும் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது ஆகிய முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது குறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“கட்சியின் பொதுச் செயலாளர்தான் பொதுக் குழுவை கூட்ட முடியும். அவ்வாறு இல்லை என்றால் துணை பொதுச் செயாலாளர் நான்தான் பொதுக் குழுவை கூட்ட முடியும். இது இரண்டும் இல்லாத இந்த பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது.

இரட்டை இலை முடக்க காரணமாக இருந்த ஓ.பன்னீர்செல்வமே சின்னத்தை மீட்க தீர்மானம் போடுகிறார். இந்த தீர்மானங்கள் செல்லுபடியாகும் முடிவை உயர் நீதிமன்றம் எடுக்கும்.

துரோகமும், துரோகமும் இணைந்து ஆட்சி நடத்துவதை மக்கள் விரும்பவில்லை. பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையைத் தொடங்கிவிட்டேன்.

நடைபெறுவது ஜெயலலிதா ஆட்சி அல்ல, தேர்தல் நடத்தால் அவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. தேர்தலில் நிற்க சில அமைச்சர்கள் பயப்படுகிறார்கள்.

தேர்தல் களத்தில் எங்களுக்கு போட்டி திமுகதான். நாங்கள் திமுகவுடன் கைகோத்துள்ளதாக சிலர் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.

எங்களிடம் 21 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளதால், பெரும்பான்மை இல்லாத இந்த ஆட்சியின் மீது ஆளுநர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். இல்லை என்றால் அடுத்த நடவடிக்கையில் இறங்குவேன்” என்றார்.