இஸ்லாம் மதத்தை அழிக்கும் சீனா: பிரபல மசூதியின் கோபுரங்கள் உடைப்பு

சீனாவில் தொன்மையான பிரபல நங்குவான் மசூதியின் மாடங்களும் கோபுரங்களும் அகற்றப்பட்டு, இஸ்லாமிய அடையாளம் உடைக்கப்பட்டது.

சீனாவின் நிங்சியா மாகாணத்தில் உள்ளது நங்வான் மசூதி. பழமையான இந்த மசூதி பிரபலமானது. ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். இதன் கோபுரங்களும், மாடங்களும் மிக புகழ் பெற்றவை. சமீபத்தில் புதுப்பிக்கிறோம் என்ற பெயரில் இந்த மசூதியின் மாடங்களும் கோபுரங்களும் இடிக்கப்பட்டது. இது சீன முஸ்லிம்கள் இடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வெளி உலகுக்கு தெரியாமல் சீன கம்யூனிஸ்ட் அரசால் செய்யப்பட்ட இந்த மாற்றம் தற்போது தான் வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது. சீனாவில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் துணை அதிகாரியாக பணிபுரியும் கிறிஸ்டினா ஸ்காட் என்பவர் தான் இந்த விஷயத்தை வெளியே கொண்டு வந்துள்ளார். சமீபத்தில் மசூதியை பார்வையிட சென்றபோது தான் அவருக்கு இது தெரியவந்துள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் மசூதியின் முந்தைய நிலையையும் தற்போதைய புகைப்படத்தையும் பதிவிட்டு அவர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

“கோபுரங்களும் விமானங்களும் காணாமல் போய்விட்டன. பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மசூதியை பார்க்கவே மனது வேதனைப்படுகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவில் இஸ்லாம் மத அடையாளங்கள் அழிக்கப்படுவதை இந்த செயல் காட்டுவதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர்.