இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்து “பிரான்ஸுக்கு ” ஆதரவாக என்றும் நிற்போம் – இந்திய பிரதமர் மோடி

பிரான்ஸில் தேவாலயத்தில் நடந்த படுகொலையை கண்டிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான பிரான்ஸின் நடவடிக்கையில் இந்தியா துணைநிற்கும் என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின் நீஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் மிகவும் கொடூரமான முறையில் இரு பெண்கள் உள்பட மூன்று பேர் கத்தியால் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தில் தாக்குதலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் பிடித்தபோது, அல்லாஹு அக்பர் என தொடர்ச்சியாக அவர் முழக்கமிட்டதாக நீஸ் நகர மேயர் தெரிவித்தார்.

தேவாலயத்துக்குள் ஒரு வயோதிக பெண், ஒரு ஆண் கழுத்தறுபட்டு கொல்லப்பட்டனர். பல முறை கத்திக்குத்து காயங்களுடன் உயிர் தப்பிய பெண் அருகே உள்ள தேநீரகத்தை அடைந்த நிலையில், அவரது உயிரும் பிரிந்தது.

உயிரிழந்தவர்களில் ஒருவர் அந்த தேவாலயத்தின் பராமரிப்பாளர். தாக்குதல் நடந்தபோது, பிரார்த்தனைக்காக வந்த பலரும் தேவாலய வளாகத்துக்குள்ளேயே இருந்துள்ளனர். அப்போது தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர், தேவாலய வளாகத்தில் இருந்த அபாய ஒலியை எழுப்பி எச்சரிக்கை செய்தார்.

இஸ்லாமியவாத பயங்கரவாதம் என்று பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங் தெரிவித்தார்.

இதுபோன்ற தாக்குதல்கள் மூலம் பிரான்ஸ் நாடு கொண்டிருக்கும் கோட்பாடுகள், மதிப்புகள் ஆகியவற்றை பலவீனப்படுத்த முடியாது என்று அவர் தெரிவித்தார்.

தாக்குதல் நடந்த நீஸ் நகரத்தின் மேயர் எஸ்ட்ரோஸி, நாட்டில் இஸ்லாமியவாத ஃபாசிஸவாதத்தின் அடையாளம் காணப்படுவதாக கூறினார்.

முன்னதாக, தாக்குதல் நடந்த சில மணி நேரத்தில் அந்த பகுதியை அதிபர் எமானுவேல் மக்ரோங் பார்வையிட்டார். நாடு முழுவதும் தேவாலயங்கள், பள்ளிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.