‘இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம்’ டிரம்ப் அறிவிப்பு, ஐ.எஸ்., அல்-கொய்தா எச்சரிக்கை

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் என டிரம்ப் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இரத்தத்தில் குளிக்க செய்வோம் என அல்-கொய்தா, ஐ.எஸ். பயங்கரவாத இயக்கங்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அது குறித்த அறிவிப்பை வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நள்ளிரவில் வெளியிட்டார். மேலும் டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேமுக்கு அமெரிக்க தூதரகத்தை உடனடியாக மாற்றவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். சர்வதேச அளவில் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கிற முதல் உலக நாடாக அமெரிக்கா திகழ்கிறது.

முன்னதாக இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, பாலஸ்தீன நிர்வாக தலைவர் மகமது அப்பாஸ், எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி, ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா ஆகியோருடன் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிடுவதற்கு முன்பே அனைத்து அரபு நாடுகளும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் ஓரணியில் திரண்டன. இது குறித்து பாலஸ்தீன நிர்வாக சர்வதேச விவகார ஆலோசகர் நஹில் கருத்து தெரிவிக்கையில், ‘‘இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம் என்று டிரம்ப் அறிவித்ததன் மூலம் அவர் ஒரு நேர்மையான மத்தியஸ்தராக செயல்பட முடியாது’’ என்று குறிப்பிட்டார். அமெரிக்காவின் ஆதரவு நாடான சவுதி அரேபியா, ‘‘இது முஸ்லிம்களுக்கு ஆத்திரம் ஏற்படுத்தும் செயலாக அமையும்’’ என்று கருத்து தெரிவித்தது.

டிரம்பின் முடிவு குறித்து விவாதித்து முடிவு எடுக்க ஜோர்டான், அரபு நாடுகள் அவசர கூட்டத்தை 9–ந் தேதி கூட்டுகின்றன. டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடைய உருவப்படம், அமெரிக்க தேசியக்கொடியை எரித்து பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டிரம்ப் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இரத்தத்தில் குளிக்க செய்வோம் என அல்-கொய்தா, ஐ.எஸ். பயங்கரவாத இயக்கங்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளன என அமெரிக்க புலனாய்வு தரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.