இளையராஜா நோட்டீஸ் விவகாரத்தை பரபரப்பு செய்தியாக்க வேண்டாம்: எஸ்பிபி

இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தை பரபரப்பு செய்தியாக்க வேண்டாம் என எஸ்.பி.பி. தனது ஃபேஸ்புக் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பாடியதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. இந்நிகழ்வு தமிழ் திரையுலகினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சமூகவலைத்தளத்தில் பலரும் இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது எழுந்துள்ள சர்ச்சை குறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பது, “எனது நண்பர்கள், இசைப் பிரியர்கள் குறிப்பாக அனைத்து பத்திரிகையாளர்களுக்கும், இளையராஜா – எஸ்.பி.பி. விவகாரத்தை பரபரப்பாக்க வேண்டாம் என்று கோரிக்கை வைக்கிறேன். நடந்த விஷயம் துரதிர்ஷ்டவசமானது. வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல வேண்டும். இப்போது இங்கு இசை நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டும். கடவுளின் படைப்பில் அனைவரும் சமம். நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர் ஒருவருக்கு அளித்துள்ள பதிலில், “இந்நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்னதாக நிச்சயமாக நான் இளையராஜாவிடம் தொலைபேசி வாயிலாகவோ அல்லது இ மெயில் மூலமாக அனுமதி கோரியிருக்கலாம். ஆனால், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியபின்னர் நான் அதை சட்ட ரீதியாக அணுக வேண்டும். ஆனால், அவ்வாறு நான் சட்ட ரீதியாக பதிலளிக்க விரும்பவில்லை. அதேவேளையில் எனக்கு சுயமரியாதை இருக்கிறது. அதனாலேயே எனது முடிவை அறிவித்தேன்.

இருப்பினும், சூடான விவாதங்களை விடுத்து முன்னேறிச் செல்வோம். நான் ஃபேஸ்புக்கில் எனது நிலைபாட்டை தெரிவிக்கக் காரணம், எனது ரசிகர்கள் நான் ராஜாவின் பாடல்களைப் பாடுவேன் என எதிர்பார்த்து ஏமாந்து விடக்கூடாது என்பதே. எனது நல்ல நண்பர் இளையராஜா எவ்விதத்திலும் அசவுகரியமாக உணரக்கூடாது என நான் விரும்பினேன். அதே வேளையில் எனக்காக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் நஷ்டமடைந்துவிடக் கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இந்த நோட்டீஸ் தொடர்பாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் “அமெரிக்காவிலிருந்து அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சியாட்டெல், லாஸ் ஏஞ்சலஸ் மாகாணங்களில் கடந்த வாரம் மிகச் சிறப்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். தாங்கள் காட்டிய அன்புக்கு நன்றி.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக இளையராஜாவின் சார்பில் வழக்கறிஞர் ஒருவர் எனக்கு சட்ட நோட்டீஸ்களை அனுப்பியிருந்தார். என்னுடன் பாடகி சித்ரா, சரண், விழா ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கச்சேரி நடைபெறும் இடங்களின் நிர்வாகத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தன.

அதில், இளையராஜாவிடம் முன்னனுமதி பெறாமல் அவருடைய பாடல்களை இசைத்தால், மேடைகளில் பாடினால் அது காப்புரிமை மீறலாகும். அவ்வாறான உரிமை மீறலுக்கு பெருந்தொகையை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும். சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எஸ்பிபி 50 என்ற இந்த நிகழ்ச்சி எனது மகனால் தயாரிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் டொரண்டோவில் இந்நிகழ்ச்சியை துவக்கினோம். பின்னர் ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபய் ஆகிய நாடுகளிலும் இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் இந்த நிகழ்ச்சியை நடத்தினோம். அப்போதெல்லாம் இளையராஜாவிடமிருந்து எனக்கு எவ்வித எதிர்ப்பும் வரவில்லை. ஆனால், இப்போது அமெரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதும் மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு என்பது எனக்குப் புரியவில்லை.

ஏற்கெனவே கூறியதுபோல், எனக்கு இச்சட்டம் குறித்து தெரியாது. இருந்தாலும் சட்டத்தை மதிக்க வேண்டியது எனது கடமை. இனி மேடைகளில் இளையராஜாவின் பாடல்களைப் பாடப்போவதில்லை.

அதே வேளையில், ஏற்கெனவே ஒப்புக் கொண்டதுபோல் நிகழ்ச்சியையும் நடத்தியாக வேண்டும். இறைவன் அருளால் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களையும் நான் அதிகளவில் பாடியிருக்கிறேன். நீங்கள் அனைவரும் எனது நிகழ்ச்சிக்கு ஆதரவு அளிப்பீர்கள் என நம்புகிறேன்.

உங்கள் பேரன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

இத்தருணத்தில், எனது வேண்டுகோள் எல்லாம் இப்பிரச்சினை தொடர்பாக எவ்வித கடுமையான வாதங்களையும் கருத்துகளையும் முன்வைக்க வேண்டாம் என்பது மட்டுமே. இது கடவுளின் கட்டளை என்றால் அதை நான் பணிவுடன் கடைபிடிப்பேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.