இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கியதால் பரபரப்பு. மகளின் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார்

குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், தர்மராஜா தெருவைச் சேர்ந்தவர் முனியப்பன் (வயது 45). இவரது மகள் சீதா(18). இவர் குன்றத்தூர், சிறுகளத்தூர் பகுதியைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் (19), என்பவரை காதலித்து வந்துள்ளார். தனது காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக கடந்த 2 மாதங்களாக காதலன் வீட்டிலேயே சீதா தங்கி இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சீதா தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த காதலன் வீட்டார் அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சீதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சீதா உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து காதலன் அரிகிருஷ்ணனை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில், அரிகிருஷ்ணன், சீதா இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கு சீதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது பெற்றோரை பிரிந்து சீதா, அரிகிருஷ்ணன் வீட்டில் கடந்த 2 மாதங்களாக தங்கி உள்ளார். திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். குடிப்பழக்கம் உடைய அரிகிருஷ்ணன் வேலைக்கு ஏதும் செல்லாமல் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை சீதா கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சீதாவை அரிகிருஷ்ணன் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் மனம் உடைந்து போன சீதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அரிகிருஷ்ணன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தனது மகளை, அரிகிருஷ்ணன் தான் அடித்து கொலை செய்து விட்டதாகவும், அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் பெண்ணின் பெற்றோர் போலீசாரிடம் புகார் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். காதலன் வீட்டில் காதலி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.