‘இலங்கை ராணுவத்தினர் கண் முன் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்’

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பிறகு இஸ்லாமியர் வாழும் சில பகுதிகளில் தொடர் தாக்குதல்கள் நடக்கின்றன. புத்தளம் மாவட்டத்திலுள்ள துன்மோதர பகுதியில் இஸ்லாமியர்கள் வீடுகள் மற்றும் பள்ளிவாசலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வன்முறையாளர்கள் குரான் பிரதிகளை எரித்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

இலங்கையில் புத்தளம், குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களின் முஸ்லிம்கள் வாழும் சில பகுதிகளிலும் மே 13 அன்று தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த தாக்குதல் சம்பவங்களினால் பல முஸ்லிம் கிராமங்கள் கடுமையான சேதம் மற்றும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

இது புத்தளம் மாவட்டத்திலுள்ள நாத்தாண்டிய – துன்மோதர பிரதேசமாகும்.

இந்த பிரதேசத்தில் பெருமளவு தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்ற போதிலும், இந்த கிராமத்தை சூழ்ந்துள்ள பகுதிகள் அனைத்திலும் இலங்கையின் பெரும்பான்மை சமூகமான சிங்களவர்களே வாழ்ந்து வருகின்றனர்.

துன்மோதர பகுதிக்குள் நேற்று முன்தினம் மாலை வேளையில் முகங்களை மூடியவாறு சுமார் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடி பிரவேசித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

துன்மோதர பகுதிக்குள் வெளிநபர்கள் பிரவேசிக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில், தமது கிராமத்து இளைஞர்கள் ஒன்று திரண்டிருந்ததை அவர்கள் அவதானித்துள்ளதாக அந்த பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரான நிஷ்தார் தெரிவிக்கின்றார்.

ராணுவத்தினர் இருந்தும் இஸ்லாமியர்கள் வன்முறையை தடுக்கத் தவறியதாக காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது.

இந்த காணொளி குறித்து விசாரணை நடத்தப்படும் என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது