இலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு

முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக பதவி விலகியது ஏன் என்பது குறித்து இலங்கை பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விளக்கம் கூறினர்.

இலங்கையின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களுக்குமிடையிலான சந்திப்புகள் நேற்று புதன்கிழமை கண்டியில் இடம்பெற்ற போதே இதனை அவர்கள் கூறியுள்ளனர்.

அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை பிற்பகல் 2.00 மணியளவிலும், ராமான்ய பீடத்தின் மகாநாயக்க தேரரை இரவு 7.00 மணியளவிலும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர்.

இந்த நிலையில் மேற்படி சந்திப்புகளில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து, முன்னாள் ராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி, பிபிசிக்கு தகவலளித்தார்.

அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்பின் போது; முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியது பெரும்பான்மை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியதாகவும், அந்த கூட்டு பதவி விலகலை தவறானதொரு செயற்பாடாக அந்த மக்கள் பார்க்கும் நிலை உருவானதாகவும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மகாநாயக்க தேரர்கள் கூறியதாக, அமீர் அலி தெரிவித்தார்.

முஸ்லிம் சமூகத்தினுள் பயங்கரவாதச் செயற்பாடுகள் உருவாகும் வரையில், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அதுகுறித்து அறிந்திராமல் இருந்தமை குறித்து மகாநாயக்க தேரர்கள் கவலை தெரிவித்ததாகவும், சிங்கள மக்கள் மத்தியில் இந்த நிலவரமானது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, அது இயல்பானதொன்று என்றும் மகாநாயக்கர்கள் கூறியதாகவும், அமீர் அலி விவரித்தார்.

அமைச்சர் றிசாட் பதியுதீனை காப்பாற்றுவதற்காக தாங்கள் கூட்டாக ராஜிநாமா செய்யவில்லை என்றும், முஸ்லிம் அமைச்சர்கள் ஒவ்வொருவர் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் நிலவரம் உருவாகும் என உணரப்பட்டதால்தான் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் கூட்டாக ராஜினாமா செய்ததாகவும் மகாநாயக்க தேரர்களிடம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியதாவும் அமீர் அலி தெரிவித்தார்.

“முஸ்லிம்களின் கடைகளையும் பள்ளிகளையும் உடைக்க வேண்டுமென்று சில பௌத்த மதகுருக்களே வீதியில் இறங்கி கோஷமிட்டனர். அப்போது எமது பதவி முக்கியமா? அல்லது நாடு முக்கியமா? என்கிற கேள்வி எமக்குள் எழுந்தது. இறுதியில் நாட்டுக்காக எமது அமைச்சுப் பதவிகளை கூட்டாக துறந்தோம் என்று மகாநாயக்க தேரர்களிடம் நாம் கூறினோம்” என்றார் அமீர் அலி.

இதன்போது, மகாநாயக்க தேரர்களிடம் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் நீண்டதொரு விளக்கத்தை வழங்கியதாகவும் அமீர் அலி தெரிவித்தார்.

“வடக்கு முஸ்லிம்களாகிய நாங்கள் பயங்கரவாதத்துக்கு உதவவில்லை என்பதற்காகவே, எங்கள் தாய் மண்ணிலிருந்து நாங்கள் துரத்தியடிக்கப்பட்டோம். நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரித்திருந்தால் எங்கள் மண்ணிலேயே தொடர்ந்தும் நாங்கள் இருந்திருப்போம்”.

“சிலர் செய்த பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக ஒட்டு மொத்த சமூகமும் தண்டிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது”.

“என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. என்மீதான குற்றச்சாட்டுகளுக்கு எங்கெல்லாம் விளக்கம் கொடுக்க முடிந்ததோ, அங்கெல்லாம் கூறிவிட்டேன். அதையும் மீறி, என்னை குற்றவாளி என்று கூறிக்கொண்டேயிருந்தால் நான் என்னதான் செய்வது?

இப்போது என்னை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்திப் பேசுகிறார்கள். அதையும் நான் மறுத்து விட்டேன். ஆனால் ஏற்றுக்கொள்ளவில்லை.

“இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் சஹரான் உடன்படிக்கை” – அசாத் சாலி
எனவேதான், இவ்வாறான குற்றச்சாட்டுகளையெல்லாம் மறுதலிக்கும் பொருட்டு, எமது அமைச்சுப் பதவிகளை கூட்டாக ராஜினாமா செய்தோம்.

எங்கள் மீது குற்றம் இருந்தால் போலீஸில் முறைப்பாடு செய்து, எம்மைத் தண்டிக்க முடியும். அதற்காக எமது சமூகத்தை தண்டிக்க முடியாது” என்று றிசாட் பதியுதீன் அங்கு தெரிவித்தாகவும் அமீர் அலி கூறினார்.

இந்த சந்திப்பை அடுத்து, மாலை 7.00 மணியளவில் ராமான்ய பீட மகாநாயக்க தேரரையும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேசினர்.

கசப்புணர்வுகளை மறந்து விட்டு, மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறும் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை ஏற்படுத்த முன்வருமாறும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் , ராமான்ய பீட மகாநாயக்க தேரர் கோரிக்கை விடுத்ததாக அமீர் அலி கூறினார்.

அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் ஆசாத் சாலி ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, பௌத்த மதகுருவும் நாடாளுமன்ற உறுப்பினருமான அத்துரலியே ரத்ன தேரர் உண்ணா விரதத்தில் ஈடுபட்டதை அடுத்து, முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் முஸ்லிம் ஆளுநர்கள் அனைவரும் பதவி விலகினர்.

இதனையடுத்து, ராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள், அவர்களின் பதவிகளை மீண்டும் ஏற்க வேண்டுமென, பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.

இந்நிலையிலேயே, மகாநாயக்க தேரர்களை முஸ்லிம்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து, தமது நிலைப்பாடுகளையும், பதவி விலகியதற்கான தங்கள் தரப்பு நியாயங்களையும் விளக்கிக் கூறியுள்ளனர்.