இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியூதீன் கைது

இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் ரிஷாட் பதியூதீன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி போலீஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

கொழும்பு புறநகர் பகுதியான தெஹிவளை பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையிலேயே, ரிஷாட் பதியூதீன் இன்று கைது செய்யப்பட்டார்.

ரிஷாட் பதியூதீனை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில், ரிஷாட் பதியூதீன் தலைமறைவாகியிருந்தார்.

சுமார் 6 நாட்கள் தலைமறைவாகியிருந்த ரிஷாட் பதியூதீனை, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், குற்றப் புலனாய்வு திணைக்கள தலைமையகத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு தினத்தில், புத்தளம் பகுதியிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை, அரச பஸ்களின் ஊடாக மன்னார் பகுதிக்கு அழைத்து சென்று வாக்களிக்க வைத்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச பஸ்களில் மக்களை அழைத்து சென்றதன் ஊடாக, பொது சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை, அரச நிதியை முறைகேடாக செலவிட்டமை மற்றும் தேர்தல் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட மூவரை கைது செய்யுமாறு கடந்த 14ஆம் தேதி சட்ட மாஅதிபர் போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதையடுத்து, அன்றைய தினமே 6 போலீஸ் குழுக்கள் ரிஷாட் பதியூதீனை கைது செய்வதற்காக மன்னார் மற்றும் கொழும்பு பகுதிகளிலுள்ள அவரது வீடுகளில் சோதனைகளை நடத்தியிருந்தது.

எனினும், ரிஷாட் பதியூதீன் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் போலீஸார் அறிவித்திருந்தனர்.