இலங்கை பார்லி.யை கலைக்க முடிவா?

இலங்கை பார்லிமென்ட்டை கலைக்க திட்டமிட்டு உள்ளதாக வெளியான செய்தியை அரசு மறுத்துள்ளது.

இலங்கையில், 2015ல் நடந்த அதிபர் தேர்தலின் போது, யு.பி.எப்.ஏ., எனப்படும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும், யு.என்.பி., எனப்படும், ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. அதிபர் வேட்பாளரான, மைத்ரிபால சிறிசேனவுக்கு, ரணில் விக்கிரம சிங்கேவின், ஆதரவு அளித்ததையடுத்து சிறிசேன, அதிபராகவும், ரணில், பிரதமராகவும் பதவியேற்றனர்.

கடந்த அக்டோபர் 26-ம் தேதி அதிபர் சிறிசேனா திடீரென யு.என்.பி., உடனான கூட்டணியை முறித்து பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவுடன் கூட்டணி வைத்து அவரையே பிரதமராகவும் நியமித்தார்.இது, இலங்கையில், பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியது. ரணிலும், ராஜபக்சேயும் பலத்த நிரூபிக்க வேண்டிய நிலையில் நவ. 14-ம் தேதி பார்லி. கூட்ட அதிபர் சிறிசேனா திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் திடீர் திருப்பாக இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என செய்திகள் பரவின. இது குறித்து ஐக்கிய தேசிய கட்சி எம்..பி. அஜித் பீ பெரெரா வெளியிட்டுள்ள செய்தியில் பார்லி.யில் பெரும்பான்மை நிரூபிக்க தவறும் பட்சத்தில் பார்லி. கலைக்கப்படலாம் என்றார்.

அஜித் பீ பெரேராவின் பேட்டியை இலங்கை அரசின் தகவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. உடனடியாக இலங்கை அரசின் தகவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்பது அடிப்படை ஆதாரமற்ற செய்தி தவறான தகவல். அரசுக்கு அப்படி ஒரு திட்டமில்லை. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.