இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பு

இலங்கை நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளமையை நிரூபிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட யோசனைக்கு ஆதரவாக 117 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றில் பெரும்பான்மையினை நிரூபிக்கும் பொருட்டு 113 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றால் போதுமானதாகும்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை உள்ளமையினை நிரூபிப்பதற்கான மேற்படி யோசனையினை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்திருந்தார்.

இதன்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அதன் கூட்டுக் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவையும் வாக்களித்தன.

அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) நாடாளுமன்ற உறுப்பினர்கள் 06 பேரும், இந்த வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

எவ்வாறாயினும், இன்றைய நாடாளுமன்ற அமர்வினை ஜனாதிபதி மற்றும் மஹிந்த ராஜபக்ஷ சார்பான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிஷ்கரித்திருந்தனர்.

இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும்பான்மையினை காட்டும் வகையில் இன்று நடத்தப்பட்ட வாக்களிப்பு நடவடிக்கையினை தாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் கூறினார்.

தற்போதுள்ள நாடாளுமன்றமானது சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் விரோதமானது எனத் தெரிவித்த கெஹலிய ரம்புக்வெல; இவ்வாறானதொரு நாடாளுமன்ற அமர்வில் எடுக்கப்படும் தீர்மானங்கள் பெறுமதியற்றவை எனவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மையினை நிரூபிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பு நடவடிக்கை பற்றி, ஜனாதிபதிக்கு சபாநாயகர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.