இலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி, எம்.பி. ஒருவர் காயம் – மீண்டும் ஒத்திவைப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் இன்றும் கூச்சல் ஏற்பட்டது. எம்.பிக்களுக்கிடையே மோதல் போக்கு ஏற்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காயமடைந்தார். சுமார் ஒரு மணி நேரம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூச்சல் குழப்பம் நீடித்தது.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவப்பெரும கத்தியுடன் திரிந்ததாக காட்டும் படங்கள் வெளியாயின. இத்தகைய படங்களுடன் ரிவிர என்ற இணைய தளம் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்குக் கூடிய போது, பிரதமருக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் மகிந்த ராஜபக்ஷ அமர்ந்திருந்தார். ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சியினர் பக்கம் இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.

சபையை சபாநாயகர் ஆரம்பித்தபோது, மகிந்த ராஜபக்ஷ அணியைச் சேர்ந்த தினேஸ் குணவர்தன எம்.பி உரையாற்ற முயற்சித்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. சபாநாயகர் தினேஸ்குணவர்தனவை கடுமையாக விமர்சித்தார். இதனையடுத்து பிரதமர் ஆசனத்தில் அமர்ந்திருந்த மகிந்த ராஜபக்சவை உரையாற்ற அனுமதிப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதனையடுத்து மகிந்த ராஜபக்ஷ உரையாற்ற ஆரம்பித்தார். மகிந்த ராஜபக்ஷவின் உரைக்கு ஆரம்பம் முதலே இடையூறு ஏற்படுத்தப்பட்டது. கூச்சலுக்கு மத்தியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றி முடித்தார். இதன்பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்லவிற்கு உரையாற்ற வாய்ப்பளிக்கப்பட்டது.

இதன்போது எழுந்த லக்ஸ்மன் கிரியெல்ல, ”நாடாளுமன்ற உறுப்பனர் மகிந்த ராஜபக்ஷவின் உரையின் மீது நம்பிக்கையில்லை” அதனால் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டும் எனக் கோரினார். இதற்குப் பதிலளித்த சபாநாயகர் அதனை தனக்கு தீர்மானிக்க முடியாது எனவும், சபையில் பெரும்பான்மையினர் தீர்மானித்தால் வாக்கெடுப்பை நடத்த முடியும் எனக் கூறினார்.

மறுகணம் சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. சபாநாயகரின் ஆசனத்தை நோக்கி மகிந்த அணியினர் செல்ல ஆரம்பித்தனர். ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சென்று சபாநாயகரை பாதுகாப்பதற்காக சூழ்ந்து கொண்டனர். இதனையடுத்து வாக்குவாதங்கள் மோசமடைந்தன.

இரண்டு எம்.பிக்களுக்கிடையே மோதல் போக்கும் ஏற்பட்டது. எனினும், சக எம்.பிக்கள் இவர்களை சமாதானப்படுத்திக் கொண்டிருந்த போது, திமுத் அமுனுகவின் கையில் காயம் ஏற்பட்டு ரத்தப் போக்கு ஏற்பட்டது. அவசரமாக அழைத்துச் செல்லப்பட்ட திமுத் அமுனுகம எம்.பிக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது.

தொடர்ந்து சபையை அமைதிப்படுத்த சபாநாயகர் கடுமையாக முயற்சித்துக் கொண்டிருந்தார். சுமார் 10 – 15 நிமிடங்கள் வரை சபாநாயகர் தொடர்ந்து முயற்சித்த போதும் அந்த முயற்சி வெற்றியளிக்காததை அடுத்து சபாநாயகர் தனது ஆசனத்தில் இருந்து எழுந்து சென்றார்.

இதன்பின்னர் மகிந்த ராஜபக்சவும், அதனைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கவும் சபையை விட்டு வெளியேறிச் சென்றனர்.

மீண்டும் சபை எப்போது கூட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியாகாத நிலையில், சபையின் பணிகள் முடங்கியுள்ளன.

இறுதியாக கிடைத்த தகவலுக்கமைய, காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என நாடாளுமன்ற அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கடந்த 15 வருடங்களில் நேற்றும் இன்றுமே ஒழுங்குப்பத்திரம் இன்றி நாடாளுமன்றம் கூடியதாகவும் தனது 15 வருடகால நாடாளுமன்ற செய்தி சேகரிப்பு அனுபவத்தில் பதிவானது என நாடாளுமன்ற செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார். இதற்கு முன்னர் நாட்டில் வெள்ளநிலை ஏற்பட்டபோது ஒரேயொரு முறை சபை ஒழுங்குபத்திரம் இன்றி கூடி, சில நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது மட்டுமே தனக்கு நினைவிருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கை அரசியல் நெருக்கடி: இன்றும் முடங்கியது நாடாளுமன்றம்

இலங்கை நாடாளுமன்றம் கூடியபோது, வெளிநாட்டு தூதவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் நேற்றும் இன்றும் கூடியிருந்தனர்.

நாடாளுமன்றம் நாளை 16ஆம் தேதி கூடுவதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது. இன்று முற்பகல் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர், நவம்பர் 21ஆம் தேதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதாக இதற்கு முன்னர் சபாநாயகர் அறிவித்திருந்தார். எனினும், கட்சித் தலைவர்கள் மீண்டும் கூடிய போது நாடாளுமன்றத்தை நாளை 16ஆம் தேதி பிற்பகல் 1.30 இற்கு கூட்டுவதாக தீர்மானித்துள்ளனர்.