
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு – ”ஒரு தற்கொலை குண்டுதாரி பிரிட்டனிலும் ஆஸ்திரேலியாவிலும் படித்தவர்” – ருவன் விஜயவர்த்தனே
”இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்கள் மற்றும் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்” என புதன்கிழமையன்று பாதுகாப்பு ராஜீய அமைச்சர் ருவன் விஜயவர்த்தனே தெரிவித்துள்ளார்.
”அவர்கள் தனிப்பட்ட வகையில் நல்ல பொருளாதார வசதியோடு இருப்பவர்கள். அவர்களது குடும்பம் பொருளாதார ரீதியாக நிலையாக நல்ல நிலைமையில் இருந்துள்ளது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
”தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் பிரிட்டனில் படித்ததாகவும் பின்னர் முதுகலை படிப்பை ஆஸ்திரேலியாவில் படித்து முடித்துவிட்டு இலங்கையில் நிரந்தரமாக குடியேறியதாக அறிகிறோம்” என்றும் ருவன் தெரிவித்துள்ளார்.
ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றது. ஆனால் இதுவரை இந்த தாக்குதலில் அந்த குழு ஈடுபட்டதற்கான நேரடி ஆதாரங்கள் எதையும் அளிக்கவில்லை.
காவல்துறையினர் ஒன்பது தாக்குதலாளிகளில் எட்டு பேரை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் வெளிநாட்டினர் யாரும் இல்லை.
இலங்கையில் எதிர்வரும் சில தினங்களுக்குள் பாதுகாப்பு பிரிவில் மறு சீரமைப்பு மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இலங்கையில் தாக்குதல்கள் நடப்பதற்கான சாத்தியங்கள் குறித்து பாதுகாப்பு அமைப்புகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்தாலும், இது குறித்து தமக்கு முன்னரே தெரிவிக்கப்படவில்லை என செவ்வாய்கிழமையன்று தெரிவித்திருந்த சிறிசேன இவ்விவகாரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்.
அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கையில் நடந்த தாக்குதல்களில் இஸ்லாமிய அரசு குழுவுக்கும் தொடர்பு இருக்கலாம் என கூறியுள்ளார்.
தாக்குதலில் இறந்தவர்களுக்கான இறுதிச்சடங்குகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 359ஐ தொட்டுள்ளது. குறைந்தது 500 பேர் காயமடைந்தனர்.

முன்னதாக செவ்வாய்கிழமையன்று இரவு தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் சிறிசேன, வரும் வாரங்களில் காவல்துறை மற்றும் பாதுகாப்பு படைகளை முழுமையாக மறுகட்டமைப்பு செய்யவுள்ளதாக தெரிவித்தார்
” அயல்நாட்டிடம் இருந்து உளவுத் துறை அறிக்கை வந்தபோதும் அதை தன்னிடம் பகிராத பாதுகாப்பு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளேன்” என அவர் கூறியுள்ளார்.
பிபிசி உலக சேவையின் தெற்காசிய ஆசிரியர் எத்திராஜன் அன்பரசன் இந்த விவகாரம் பற்றி குறிப்பிடுகையில் ”பாதுகாப்பு அதிகாரிகள் இந்த தாக்குதல்கள் தொடர்பான உளவு அறிக்கையை தன்னிடம் பகிரவில்லை என இலங்கை அதிபர் சிறிசேன கூறியிருப்பது அவர் சங்கடமான வகையில் ஒப்புதல் தருவதாக அமைந்துள்ளது,” எனக் கூறியுள்ளார்.
”இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பொறுப்பேற்பதாக கூறியுள்ளது. ஐஎஸ்ஸின் பட்டியலிலேயே இதுவரை இல்லாத இலங்கை தற்போது இந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது” என பிபிசி செய்தியாளர் விவரிக்கிறார்.
அவசரநிலைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின்கீழ் இலங்கை முழுவதும் அவசரகால சட்ட ஷரத்துக்களை நடைமுறைப்படுத்த நாடாளுமன்றம் புதன்கிழமை ஒரு மனதாக அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 22-ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி பிறப்பித்த அவசர நிலைக்கான வர்த்தமானிக்கு அமையவே நாடாளுமன்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கெஹலிய ரம்பூக்வெல்ல கருத்து
தாக்குதல் பற்றி முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டது பற்றி தமக்குத் தெரியாது என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன கூறியிருந்தார்.
இது பற்றி செய்தியாளர் சந்திப்பில் இன்று புதன்கிழமை கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்பூக்வெல்ல “சர்வதேச உளவு சமூகம் இலங்கைக்கு தகவல் தெரிவிப்பது என்றால் இரண்டு துறைகள் மூலம்தான் தகவல் தெரிவிக்க முடியும். அவை, வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை. இதில் பாதுகாப்புத் துறைக்கு ஜனாதிபதிதான் அமைச்சர். எனவே, அரசாங்கத்துக்குதான் தகவலே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது பாதுகாப்புப் பிரிவு தங்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்று ஜனாதிபதியும், பிரதமரும் கூறுவதை ஏற்க முடியாது” என்று தெரிவித்தார்.
இவர் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுனவை சேர்ந்தவர்.