இலங்கை தென்கிழக்குப் பல்கலை.: நிர்வாக அலுவலகத்தை ஆக்கிரமித்த மாணவர்கள் கைது

கடந்த இரண்டு வார காலமாக, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை போலீஸார் கைது செய்து, நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவர்கள் அனைவரையும் அடுத்த மாதம் 1-ம் தேதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை காலை, பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த அக்கரைப்பற்று போலீஸார், நிர்வாகக் கட்டடத்துக்குள் புகுந்திருந்த, 15 சிங்கள மாணவர்களையும் கைது செய்து, பல்கலைக்கழக பேருந்தில் அழைத்துச் சென்றனர்.

பகடி வதையில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையை சேர்ந்த சில மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டதோடு, சிலருக்கு வகுப்புத் தடையும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்த மாணவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி, அதே துறையைச் சேர்ந்த மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்துக்குள் கடந்த 12ஆம் தேதி புகுந்து, நிர்வாக செயற்பாட்டை முற்றாக முடக்கிவிட்டனர்.

இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் செய்த புகாரால், ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மாணவர்களை அங்கிருந்து வெளியேறிச் செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனையும் பொருட்படுத்தாது, அந்த மாணவர்கள் தொடர்ந்தும் நிர்வாகக் கட்டடத்தினுள் இருந்து வந்த நிலையில், அவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருந்தது.

ஆயினும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் போலீஸார் மெதுவாக செயல்பட்டதாக தெரிவித்து, கடந்த திங்கட்கிழமை, பல்கலைக்கழக சமூகம் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மறு அறிவிபு்பு வரும் வரை, பல்கலைக்கழகத்தை தாற்காலிகமாக மூடுவதாக, நேற்று புதன்கிழமை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது.

ஆயிரம் ரூபாய் சம்பளக் கோரிக்கையால் அதிர்ந்த கொழும்பு – போலீஸ் தடியடி
புதுக்கட்சி தொடங்கினார் இலங்கை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன்
மேலும், நேற்று பிற்பகல் 4 மணிக்குப் பின்னர் பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவர்கள் தங்குவது, சட்டவிரோமாகும் எனவும் நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர்.

இது இவ்வாறிருக்க, மாணவர்கள் ஆக்கிரமித்திருந்த நிர்வாகக் கட்டடத்துக்கான மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் ஆகியவை நிறுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சூழ்நிலையில் நேற்றிரவு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த போலீஸார், நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை, அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆனால், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை, அங்கிருந்து தாம் வெளியேறப் போவதில்லை என்று, மாணவர்கள் உறுதியாகக் கூறினர்.

இதனையடுத்து, இன்று வியாழக்கிழமை காலை, பல்கலைக்கழகத்துக்குள் அதிக எண்ணிக்கையில் நுழைந்த போலீஸார், நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமிப்புச் செய்திருந்த மாணவர்களை கைது செய்து, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் பிற்பகல் ஆஜர் படுத்தினர்.

இதன்போது, மேற்படி 15 மாணவர்களையும் அடுத்த மாதம் 1ம் தேதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட இந்தப் பிரச்சினை காரணமாக, அங்குள்ள விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும், சுமார் 3,750 மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.