இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு, 7500 அமெரிக்க டாலர் அபராதம்

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு, 7500 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

விளையாட்டு நிபந்தனைகளை மீறி, மது போதையில் வாகனத்தை செலுத்தியமை மற்றும் விபத்தை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்காக திமுத் கருணாரத்னவிற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவிக்கின்றது.

கொழும்பு – கிங்சி வீதியில் கடந்த 31ஆம் திகதி திமுத் கருணாரத்னவின் ஜீப் வண்டி, முச்சக்கரவண்டியொன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியிருந்தது.

இந்த விபத்து நேரும் சந்தர்ப்பத்தில், திமுத் கருணாரத்ன மதுபோதையில் வாகனத்தை செலுத்தியுள்ளமை விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட திமுத் கருணாரத்ன, பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

விபத்தில் முச்சக்கரவண்டி முழுமையாக சேதமாகியிருந்ததுடன், முச்சக்கரவண்டியின் ஓட்டுநரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இலங்கையை வதைக்கும் வறட்சி; பாதிப்பில் பல்லாயிரம் குடும்பங்கள்
மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்
இந்த நிலையில், திமுத் கருணாரத்ன கடந்த முதலாம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது, ஒரு லட்சம் ரூபாய் விதமான இரண்டு சரீர பிணையில் திமுத் கருணாரத்னவை விடுவிக்க நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்ததுடன், அவரது வாகன ஓட்டுநர் அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக ரத்து செய்யுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில், முழுமையாக பரிசோதனையொன்றையும் மேற்கொண்டு, அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் அன்றைய தினம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராகவுள்ளதாக திமுத் கருணாரத்ன சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இந்த வழக்கு மீதான விசாரணைகள் எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தன்னால் ஏற்படுத்தப்பட்ட இந்த விபத்து, தேசிய கிரிக்கெட் அணி வீரரின் கைகளினால் ஏற்படக்கூடாததொரு செயல் என திமுத் கருணாரத்ன, தனது ஃபேஸ்புக் பக்கத்தின் ஊடாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.