இலங்கை ஜனாதிபதி சிறிசேனவின் ஐ.நா வருகையை முன்னிட்டு கண்டன போராட்டம்

இலங்கை ஜனாதிபதி சிறிசேனவின் ஐ.நா வருகையை முன்னிட்டும், தாயகத்தில் 200 நாட்கள் தாண்டியும் அரசின் பாராமுகத்தோடும் கண்ணீரோடும் எழுச்சியோடும் நடைபெற்று கொண்டு இருக்கும் மக்கள் எழுச்சி போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் முகமாகவும் கனடிய மண்ணில் கனடா தமிழ் சமூகமும் கனடா தமிழ் மாணவர் சமூகமும் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு முன்னால் நடத்தவுள்ளனர்.
இடம்: அமெரிக்க துணைத் தூதரகம், டொரண்டோ (360 University Avenue)
திகதி: செவ்வாய் செப்டெம்பெர் 26, 2017
நேரம்: மாலை 5:00 மணி முதல் 7:00 மணிவரை
இந்த கண்டன போராட்டத்திற்கு கனடா வாழ் அனைத்து மக்களும் ஊடகங்களும் ஆதரவு நல்கி அணி திரண்டு தாயகத்தில் போராடும் எங்கள் உறவுகளின் கண்ணீரை உலகுக்கு எடுத்து சொல்லும் காலப்பணியில் அணி திரளுமாறு அன்போடு வேண்டிக்கொள்கின்றோம்.
ஆட்சி மாற்றம் என்ற போர்வையில் இலங்கை அரசாங்கம் தமிழீழ மக்களுக்கும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரான அரசியல் சதுரங்க வேலைகளை நேர்த்தியாக நகர்த்த முற்படுவார்கள் என்ற வாதத்தை நாம் தொடர்ந்து மக்களுக்கு பல வழிகளிலும் எடுத்துரைத்திருக்கின்றோம். சமகால அரசியலையும் கள நிலவரங்களையும் சீர்தூக்கிப் பார்த்தால் அந்த தெளிவு யாவருக்கும் புலப்படும். இலங்கை அரசு தொடர்ச்சியான அழிவுகளை தமிழர் தேசம் மீது வெவ்வேறு வழிகளில் நடத்தி வருகின்றது. அத்துடன் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்குரிய சர்வதேச விசாரணையை மழுங்கடிக்கும் முகமாக சர்வதேசத்தையும் மனித உரிமை அவையையும் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து எவ்வித விசாரணையும் இதுவரை நடத்தப்படவில்லை. சிறைகளுக்குள் விசாரணைகள் ஏதுமின்றி அநீதியாக ஆண்டுக்கணக்காக தமிழ்க் கைதிகள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றார்கள். சிங்கள குடியேற்றம், சிங்கள பெயர் மாற்றம், சிங்களமயமாக்கல், பௌத்த மயமாக்கல், புத்தர் சிலைகள், புத்த விகாரைகள் என கட்டி தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து பறிக்கும் வன்செயல் தொடர்ச்சியாக இன்னும் இடம் பெற்று வருகின்றது. போதை மருந்து பாவனை, கலாச்சார சீர்கேடுகள் என்பனவற்றை வேண்டுமென்றே கட்டவிழ்த்து விட்டு தமிழ் மக்களின் வாழ்வை சிதைப்பது தொடர்கின்றது.
(1) காணாமல் ஆக்கப்பட்டுதல், கைதுகள், கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு போன்ற பல கொடும் செயலுக்கு காரணமாக உள்ள அரச படைகள் தமிழர்களின் பூர்வீக நிலங்களை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்பதையும்;
(2) தமிழன அழிப்பிற்கான விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பதையும்;
(3) உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் அவையும் தலையிட்டு தமிழீழ மக்களுக்கான சுய நிர்ணய உரிமையை நிலை நாட்டுவதற்கான பொதுசன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதையும்;
வலியுறுத்தி கனடாவில் கண்டன ஆர்ப்பாட்டம் கனடா வாழ் தமிழ் சமூகம், மாணவர் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படவுள்ளது. தியாகி திலீபனின் நினைவு நாளான செப்டெம்பெர் 26ம் திகதியன்று ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்’ என்ற அவன் கூற்றிற்கு வடிவம் கொடுக்கும் முகமாக கனடா வாழ் அனைத்து தமிழ் மக்களும் இந்த கண்டன போராட்டத்தில் கலந்து கொண்டு போராடும் தமிழீழ மக்களோடு தோளோடு தோள் நிற்குமாறு வேண்டுகின்றோம்.
கனடிய தமிழர் சமூகம்; தமிழ் மாணவர் சமூகம்
தொடர்புகளுக்கு: 416.830.7703