இலங்கை குண்டுவெடிப்பு பின்னணியில் சகோதரர்கள்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 359 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில் பணக்கார குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

மகாவேலா கார்டன்ஸ் பகுதியில் 3 அடுக்கு மாடி வீடு ஒன்றில் வசித்து வந்த இவர்களில் இன்ஷாப் இப்ராஹிம் (33) என்பவர் காப்பர் ஆலை உரிமையாளராக உள்ளார். மசாலா பொருட்கள் உற்பத்தி ஆலையின் உரிமையாளரான இவரது சகோதரர் இப்ராஹிம், தாக்குதல் நடத்தப்பட்ட சொகுசு ஓட்டல் ஒன்றில் வெடிகுண்டுகளை வைத்து சென்றது தெரிய வந்தது. இதனை அறிந்து போலீசார் அவரை தேடிச் சென்ற போது, தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்துள்ளார்.

இந்த தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர், இப்பகுதியில் இவர்களின் குடும்பம் செல்வாக்கு மிகுந்தது. பார்ப்பதற்கு மிகவும் நல்லவர்களாக இருந்தனர். இவரது தந்தை முகம்மது இப்ராஹிம், இங்கு மிகவும் புகழ் பெற்றவர். ஏழைகளுக்கு உணவு மற்றும் பணம் தந்து உதவுவார். அவரது பிள்ளைகள் இப்படி இருப்பார்கள் என நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

இஹாம் இப்ராஹிம், வெளிப்படையாக தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்க கூட்டங்களில் கலந்து கொண்டு வந்துள்ளார். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றிருந்தாலும் உள்ளூர் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் வெடிகுண்டு தாக்குதலில் சகோதரர்களுக்கு தொடர்பு இருப்பது குறித்து இலங்கை நிர்வாகிகள் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் முகம்மது இப்ராஹிமை கைது செய்து போலீசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.