இலங்கை குண்டுவெடிப்பு: தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் கைது – அமைச்சர் தகவல்

இலங்கை மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் நிலைகொண்ட பயங்கரவாதத்தை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சஹரான் இந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவர் என கூறிய போதிலும், அவர் இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இல்லை எனவும் அவர் கூறினார்.

அமைப்பொன்றின் தலைவர் ஒருபோதும் தற்கொலை குண்டுத் தாக்குலை நடத்தி உயிரிழப்பதற்கான வாய்ப்புக்கள் கிடையாது என்றும், தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘சஹ்ரான் காசிமின் தந்தை மற்றும் சகோதரர்கள் கொல்லப்பட்டனர்’
இலக்கு வைக்கப்பட்டுள்ள 8 பேரில் தானும் அடங்குவதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி வசம் காணப்படுகின்ற சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பொறுப்புக்களை, ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேனாவிற்கு வழங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தி வருகின்றது.

எழுத்து மூலம் ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நலின் பண்டா தெரிவிக்கின்றார்.

இலங்கையிலுள்ள அனைத்து வழிபாட்டு ஸ்தலங்கள் மற்றும் பாடசாலைகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். போலீஸ் மாஅதிபர் மற்றும் முப்படை தளபதிகளுக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இலங்கையில் கடந்த 21ஆம் திகதி நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து, பாடசாலைகள் மற்றும் வழிபாட்டு ஸ்தானங்கள் மீது மேலும் தாக்குதல் நடாத்துவதற்கான திட்டம் காணப்படுவதாக கடந்த காலங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு பிரிவிற்கு இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கடந்த காலங்களில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட தொழிலாளர் தினம் இந்த முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் நிலையை கருத்தில் கொண்டே இந்த தொழிலாளர் தின நிகழ்வு பேரணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கட்சிகளும், தொழிலாளர் அமைப்புக்களும் வெவ்வேறாக மிகவும் பிரமாண்டமான முறையில் தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில் இந்த தினத்தை கொண்டாடி வந்திருந்தன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தொழிலாளர் தின பேரணியை ரத்து செய்து, அதனை ஒரு சிறிய நிகழ்வாக மாத்திரம் கொழும்பில் கொண்டாடுகின்றது.

படத்தின் காப்புரிமைJEWEL SAMAD
இந்த முறை தொழிலாளர் தினத்தை கொண்டாட போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிலாளர் தின நிகழ்வும் இந்த முறை கோட்டே நகர சபை மண்டபத்தில் சிறிய நிகழ்வாக நடாத்தப்படுகின்றது.

மக்கள் விடுதலை முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வுகள், தமது அலுவலகத்திற்குள்ளே நடாத்த தீர்மானிக்கப்பட்டதாக அந்த கட்சி அறிவித்துள்ளது.

முன்னிலை சோஷலிச கட்சியின் தொழிலாளர் தின நிகழ்வு, கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக மிகவும் எழிமையான முறையில் நடாத்துவதாக அந்த கட்சி அறிவித்துள்ளது.

இலங்கையில் தொடர்ச்சியாக பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்ற பின்னணியிலேயே இந்த நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.